தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குடும்பத்தினருக்கு சொந்தமானது என்று கூறப்படும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை ரெய்டு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசன் அவர்களுக்கு சொந்தமானது ஜி ஸ்கொயர் நிறுவனம் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகம் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான முறையில் வணிகம் செய்து வருவதாக ஏற்கனவே அண்ணாமலை உள்ளிட்டோர் குற்றம் சாட்டிய நிலையில் சமீபத்தில் அண்ணாமலை அளித்த பேட்டியில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு உள்ள சொத்துக்கள் மற்றும் அதன் வருமானங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டார்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் அதிரடியாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் திமுக அண்ணாநகர் எம்எல்ஏ மோகன் அவர்களின் மகன் கார்த்திக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது என்பதும் கார்த்திக் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மதுரை, கோவை பெங்களூர் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது இந்த சோதனை முடிந்த பின்னரே கிடைத்த ஆவணங்கள் குறித்த தகவலும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்ணாமலை குற்றச்சாட்டு காரணமாகவே வருமானம் வரித்துறையினர் ரெய்டு செய்து வருவதாக புறப்படும் நிலையில் அண்ணாமலையின் குற்றச்சாட்டை ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுத்துள்ளது.தங்கள் நிறுவனத்திற்கும் திமுகவுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் அண்ணாமலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் வருமானவரித்துறை ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.