கோவை போலீஸ் செய்த தரமான சம்பவம்.. டாஸ்மாக் டூ வீடு.. வெறும் 3 நாளில் இவ்வளவு பேரா

Published:

கோவை: கோவையில் கடந்த 3 நாட்களில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 178 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வாகனத்தில் வந்த மது அருந்திவிட்டு செல்வோருக்கு தனியாக டிரைவர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோவை போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “கோயம்புத்தூரில் மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையிலான 3 நாட்கள் போலீசார் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையில் 126 இரு சக்கர வாகன உபயோகிப்பாளர்கள், 18 உயர்ரக கார்கள் உள்ளிட் 4 சக்கர வாகன உபயோகிப்பாளர்கள் என மொத்தம் 178 பேர் மீது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பது தொடர்பாக அனைத்து மதுபானக்கூட உரிமையாளர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தினோம். அப்போது மதுபானக் கூடங்க ளுக்கு சொந்த வாகனங்களில் வருபவர்கள் திரும்ப செல்லும் போது வாகனத்தை இயக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மதுபானக்கூடத்திற்கு மது அருந்த வருவோர், தங்களின் வாகனத்தை இயக்க டிரைவருடன் வருவதை மதுபான கூட உரிமையாளர் உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், மது அருந்திய நபரை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து செல்ல மாற்று வாகனத்துடன் டிரைவரை ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது நம்பகமான டிரைவர் மூலம் மது குடித்த நபரை அவருடைய சொந்த வாகனத்திலேயே வீட்டில் விட்டு வர மதுபானக் கூடம் சார்பாக ஏற்பாடு செய்ய வேண்டும். மது குடிக்க வருபவர் கள் வேறு ஏதேனும் போதைப்பொருட்களை உபயோகிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

அனைத்து மதுபானக்கூடங்களின் உள்ளும், வெளிப்புறத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மதுபானக்கூடங்களில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மதுபானக்கூட உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மது அருந்திவிட்டு வாகனம் இயக்கி முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்படுவோர் மீது ரூ.10 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளது. எனவே மது அருந்திவிட்டு மோட்டார் வாகனத்தை அறவே இயக்கக்கூடாது” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

மேலும் உங்களுக்காக...