ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் கோர்டில் வைத்த உணர்வுபூர்வமான கோரிக்கை.. நீதிபதி போட்ட உத்தரவு

Published:

சென்னை: சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 7 நாட்கள் அமலாகத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக அமலாக்கதுறை காவலில் எடுத்து விசாரிக்க எந்த ஆட்சேபமும் இல்லை என்றும் நாளை எனது குழந்தையின் பிறந்தநாள் என்பதால் அவர்களை பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கடந்த மார்ச் மாதம் டெல்லியில் கைதானார். போதைப்பொருள் கடத்தல் ஆயிரக்கணக்கான கோடியில் சர்வதேச அளவில் நடந்ததாக புகார் எழுந்ததன் காரணமாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆகஸ்ட் 13ம் தேதி ஆஜரானார். நீண்ட விசாரணைக்குப் பிறகு முகமது சலீமை அமலாக்கத் துறை கைது செய்தது கைதான சலீமை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் வாதிடும் போது, “போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தில் போலி நிறுவனங்கள் தொடங்கி உள்ளார். அதில் முதலீடு செய்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று கூறினார்.

முகமது சலீம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காளிசரண், “மனுதாரர் விசாரணைக்கு ஆஜாராகி முழு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார். இந்நிலையில், அவரை கைது செய்தது தேவையற்றது,” என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முகமது சலீமை ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து முகமது சலீம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 15 நாட்கள் அமலாக்கதுறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, முகமது சலீமை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து நேரில் ஆஜர்படுத்தினர்.

அப்போது முகமது சலீமிடம் அமலாக்கதுறை காவலில் தங்களை எடுக்க மனு தாக்கல் செய்துள்ளார்கள் இதற்கு ஏதேனும் ஆட்சேபணம் தெரிவிக்கிறீர்களா என்று நீதிபதி அல்லி கேட்டார். அதற்கு பதிலளித்த முகமது சலீம் தனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றும் நாளை எனது குழந்தையின் பிறந்தநாள் என்பதால் அவர்களை பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதையடுத்து முகமது சலீமை 7 நாட்கள் அமலாக்க காவலில் எடுக்க உத்தரவிட்ட நீதிபதி நாளை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை அவரது குழந்தையை காண அனுமதிக்க அமலாகத்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும் உங்களுக்காக...