ஈபிஎஸ் ஒன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா அல்ல.. உங்களால் ஜெயிக்க முடியாது.. யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.. விஜய்யுடன் இணையாவிட்டால் தோல்வி தான்..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைவர்களுக்கு இணையானவர் இல்லை என்றும், கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் முதலமைச்சர் ஆக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ள…

eps

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைவர்களுக்கு இணையானவர் இல்லை என்றும், கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் முதலமைச்சர் ஆக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அரசியல் வியூக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர் தோல்விகளும் கூட்டணி சவால்களும்

2019, 2021, 2024 ஆகிய மூன்று தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. இடைத்தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தல்களிலும் கட்சி வெற்றி பெறவில்லை. இத்தகைய சூழலில், “ஆட்சியில் பங்கு கொடுக்க மாட்டோம், நாங்கள் என்ன ஏமாளிகளா?” என்று எடப்பாடி பழனிசாமி பேசுவது கூட்டணி கட்சிகளுக்கு பிடிக்காது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற வலுவான தலைவர்கள் அவ்வாறு பேசலாம். ஆனால், எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகளை அரவணைத்து, ஆட்சியில் பங்கு தருவோம் என்ற அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே மற்ற கட்சிகள் அவருடன் கூட்டணி சேர முன்வரும் என்று கூறப்படுகிறது.

விஜய்க்கான அழைப்பு: முதல்வர் பதவியைத் தியாகம் செய்ய தயாரா?

குறிப்பாக, நடிகர் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி எந்த விலையையும் கொடுக்க வேண்டும், சமரசம் செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே இருந்தால், விஜய்யை கண்டிப்பாக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்றும், அதற்காக முதல்வர் பதவியை கூட தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுகவின் சிதைவும் எதிர்காலமும்

அதிமுக ஒரு பாரம்பரியமான, வலுவான உட்கட்டமைப்பு கொண்ட கட்சி என்றாலும், தற்போது அது சுக்குநூறாக உடைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர், கட்சியின் அடிப்படை வாக்குகள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டு, விஜய் கேட்கும் நிபந்தனைகளை ஏற்று, அவரை கூட்டணி கட்சியில் சேர்த்துக் கொண்டால் மட்டுமே தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றும், இல்லாவிட்டால் மீண்டும் ஒருமுறை தி.மு.க. ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியாது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிமுகவின் அஸ்தமனமா? பாஜகவின் எழுச்சியா?

ஒருவேளை, தி.மு.க. அல்லது தவெக ஆட்சிக்கு வந்து, இரண்டில் ஒரு கட்சி எதிர்க்கட்சி என்ற இடத்தையும் பெற்றால், அது அதிமுகவின் அஸ்தமனத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவை முழுமையாக ஆக்கிரமிக்க தயாராக இருக்கும் பாஜகவுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுக என்ற ஆலமரம் அழியாமல் இருக்க வேண்டும் என்றால், விஜய்யின் நிபந்தனைகளை ஏற்று அவருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய சூழலில் முன்வைக்கப்படும் முக்கிய அரசியல் அறிவுரையாகும். இது எடப்பாடி பழனிசாமியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும்.

2021 ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தனது ஈகோவை கொஞ்சம் விட்டுக்கொடுத்து டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகிய இருவரையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் இன்று அவர்தான் முதலமைச்சர் ஆகி இருப்பார் என்றும் அந்த நல்ல வாய்ப்பை நழுவ விட்ட நிலையில் அவர் இப்போதாவது சுதாரித்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது