அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில அதிமுக கூட்டங்களில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அதிமுகவின் ஒரு பிரிவை செங்கோட்டையன் பிரித்து தனி அணியாக்கிவிடுவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரன் பிரிந்த நிலையில், ஓ.பி.எஸ். அவருடைய பங்குக்கும் ஒரு பிரிவை உருவாக்கினார். எனவே அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்தித்து வரும் அதிமுக, இன்னொரு பிரிவை கண்டால் தாங்க முடியாது என தொண்டர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதிக்கம் அதிமுகவில் அதிகமாக இருப்பதை விரும்பாத பாஜக, அவரை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டு, செங்கோட்டையனை அதிமுக பொதுச் செயலாளராக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது, அதிமுக தொண்டர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த முக்கியமான இடத்தில் செங்கோட்டையன் தான் இருந்தார். ஆனால், தினகரன் மற்றும் சசிகலாவின் முடிவு காரணமாக, எடப்பாடி பழனிச்சாமி திடீரென தலைமைப் பொறுப்பிற்கு வந்தார். பின்னர், அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கி, அதிமுகவை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
இந்த நிலையில், எடப்பாடியாரை நீக்குவது சாதாரண விஷயமா? செங்கோட்டையனை ஒரு பெரிய பதவிக்கு கொண்டுவர பாஜகவால் முடியுமா? முதலில், அதற்கு செங்கோட்டையன் ஒப்புக் கொள்வாரா? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.