இன்றைய இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்பது ஒரு போதையாகவே மாறிவிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக எந்த வகையிலும் ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளனர். பல இளைஞர்கள் ரிஸ்க் வீடியோ எடுத்து தங்கள் இன்னுயிரை இழந்து, விலைமதிப்பு உயிரை பலிகொடுத்து உள்ள நிலையில், அப்போதும் திருந்தாமல் பலரும் ரிஸ்க்கான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அது மட்டும் இன்றி, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையிலும் சிலர் இன்ஸ்டாகிராம் வீடியோவை எடுத்து வருகின்றனர். இதனால், அவர்கள் மீது காவல்துறை அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், பெங்களூரில் இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இரட்டை கொலை நடந்தது போல் போலியான ஒரு சம்பவத்தை நடத்திய இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் எல்லா ஹோம்னாபாத் ரிங் ரோட்டில் இரண்டு பேர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது போன்ற ஒரு காட்சியை பார்த்து, அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது கொலையாக இருக்கலாம் என்று கருதி, அருகில் செல்லவும் அஞ்சினர்.
தகவல் கிடைத்த காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, “கொலை செய்யப்பட்டவர்கள்” அருகில் சென்று பார்த்தபோதுதான், அவர்கள் திடீரென எழுந்து உட்கார்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையின் போது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக கொலை நடந்தது போன்ற ஒரு வீடியோவை உருவாக்கியதாக இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, போலீசார் சச்சின், சைபன்னா ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக பொதுமக்களை தொந்தரவு செய்த பிரிவின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ உருவாக்குபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என கர்நாடக மாநில காவல்துறை உயர் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.