விஜயகாந்த், கமல்ஹாசன் போல், கட்சி ஆரம்பித்த முதல் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டாம் என்றும், கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கவோ அல்லது எதிர் கட்சியாகவோ முடியாது என்றும், எனவே திமுகவுக்கு எதிரான ஒரு வலிமையான கூட்டணியில் தான் விஜய் சேர வேண்டும் என்றும், அவருக்கு நெருக்கமானவர்கள் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை விஜய் கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் இந்த கட்சி போட்டியிடப் போவது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில், விஜய் தனித்து போட்டியிடுவாரா அல்லது திமுகவுக்கு எதிராக ஒரு கூட்டணியை அமைப்பாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், அதிமுக விறுவிறுப்பாக தனது கூட்டணி அமைக்கும் பணியை தொடங்கிவிட்டது. குறிப்பாக பாஜகவை கூட்டணியில் இணைத்து கொள்ள முடிவு செய்திருப்பதால், அதனை அடுத்து பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க திட்டமிட்டுள்ளது.
எனவே, திமுகவுக்கு எதிராக ஒரு வலிமையான அணியை அமைத்தால் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதே அதிமுகவின் எண்ணமாக உள்ளது.
இந்த நிலையில், திமுக ஒரு பக்கம் வலிமையான கூட்டணி, அதிமுகவும் வலிமையான கூட்டணியாக இருக்கும் முன்னிலையில், விஜய் தனித்து போட்டியிட்டால் கண்டிப்பாக தோல்விதான் ஏற்படும் என்றும், எனவே திமுகவுக்கு எதிரான அதிமுக கூட்டணியில்தான் விஜய் சேர வேண்டும் என்றும், தொகுதிகள் குறைவாக இருந்தாலும் அதன் மூலம் துணை முதல்வர் உள்பட சில அமைச்சர் பதவியும் பெற்று, 2031ஆம் ஆண்டில் தனித்து போட்டியிடும் ரிஸ்க்கை எடுக்கலாம் என்றும், விஜய்க்கு நெருக்கமானவர்கள் வலியுறுத்தி வருவதாகவும், விஜய்யும் இது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திராவில் தனித்து போட்டியிட்ட சிரஞ்சீவி கட்சியை கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும், ஆனால் பவன் கல்யாண் புத்திசாலித்தனமாக செயல்பட்டதால் தற்போது துணை முதல்வராக உள்ளார் என்றும், அவரைத்தான் விஜய் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுரைகள் கூறப்பட்டு வருவதாக தெரிகிறது.
ஆனால் விஜய் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.