ஏற்கனவே வெளிநாடுகளில் சில செயற்கை நதிகள் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், குஜராத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயற்கை நதியால், நீர் மேலாண்மை மற்றும் நகர வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில், இந்த செயற்கை நதி எந்த அளவுக்கு மாநில மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது இனிமேல் தான் தெரியவரும்.
குஜராத் மாநிலத்தில் உள்ள கிப்ட் சிட்டியில் ரூ.600 கோடிக்கு மேல் செலவு செய்து அந்த நகரத்தை வளர்ச்சிக்கான சூழலாக மாற்ற நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் தான் இந்த செயற்கை நதி திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும், இந்த நதி திட்டம் காரணமாக நகரத்தில் நீர்மட்டம் அதிகரிக்கும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நதி, நகரத்தின் வலிமையான எதிர்காலத்தை உருவாக்கும் என்றும், நகரத்தின் புகழை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நதி குறித்து சில நெட்டிசன்கள் ஏளனமும் கிண்டலான கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர். “செயற்கை நதி பிறகு செயற்கை கடலா? செயற்கை மழையை உருவாக்க போகிறார்களா?” என்றும், “செயற்கை நதி உருவாக்கி விட்டீர்கள், அந்த நதிக்கு தண்ணீரை எப்படிக் கொண்டு வருவீர்கள்? ஒருவேளை கடலில் இருந்து தண்ணீரை நதிக்குச் சுத்தப்படுத்திக் கொண்டு வருவார்களா?” என்ற சந்தேகத்தையும் வெளியிட்டுள்ளனர்.
தண்ணீர் வீணாகி கால்வாய் வழியாக கடலுக்கு போய் விடுவதை தடுப்பதற்காக தான் இந்த செயற்கை நதி உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இந்த நதியில் மழைக்காலத்தில் ஓடும் தண்ணீரை ஆங்காங்கே விவசாயத்திற்கு பிரித்து விடப்படுமானால், மாநிலத்தில் விவசாயம் செழித்து ஓங்கும் என்றும், திட்டத்தை வடிவமைத்தவர்கள் கூறியுள்ளனர்.
மொத்தத்தில், இந்த செயற்கை நதி கிப்ட் சிட்டி நகரின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.