#BREAKING அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்… சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்!

By Amaravathi

Published:

கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்வதாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொது செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி ஓபிஎஸுடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது மற்றொரு பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வரும் நிலையில், அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்கள் அனைத்தும் பொது செயலாளருக்கு வழங்கி சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்சி சொத்துக்களின் பேரில் கடன் வாங்க, கொடுக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே உரிமை உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் விதிகள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பிரபாகர் ஆகியோரும் கட்சியின் அனைத்து பதவிகள் மற்றும் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக நந்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Comment