தாஜ், ரேடிசன் ப்ளு, தி பார்க் உள்பட சென்னையில் ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களின் பார் லைசென்ஸ் அதிரடியாக ரத்து

Published:

சென்னை : விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், வி.வி.ஏ. ஓட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு), ஹையத் ரீஜன்சி, தி பார்க் உள்பட 5 தனியார் ஓட்டல் மதுபான கூடங்களின் உரிமங்கள் தற்காலிக ரத்து செய்யப்படுவதாக மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதுமேதனியார் பார்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை தான் இயங்க வேண்டும். அதற்கு மேல் இயங்க அனுமதி இல்லை. ஐந்து நட்சத்திர ஓட்டல்களாக இருந்தாலும் அனுமதி கிடையாது. இந்நிலையில் சென்னையில் பிரபலமான தனியார் ஓட்டல் மதுபான கூடங்களில் விதிகளை மீறி செயல்பாடுகள் நடந்ததாக அரசு குற்றம்சாட்டி உள்ளது. இதையடுத்து அந்த பார்களின் உரிமத்தை தற்காலிகமாக அரசு ரத்து செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: “ சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், வி.வி.ஏ. ஓட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு), ஹையத் ரீஜன்சி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர ஓட்டல்களில் எப்.எல்.-3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன. அவற்றுள் சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை வினியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்ட விவரங்கள் தெரியவந்தன.

ஆதலால், சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த 5 நட்சத்திர ஓட்டல்களிலும் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த எப்.எல்.-3 உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்தும் அந்த மதுபானக் கூடங்களை உடனடியாக மூடவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...