2018 திரைப்பட பாணி.. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றிவிட்டு வெள்ளத்தில் உயிரைவிட்ட இளைஞர்

By Keerthana

Published:

வயநாடு” வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மலை கிராமங்கள் உருக்குலைந்து போன நிலையில்,அங்கு சூரல்மலையை சேர்ந்தவர் பிரஜீஷ் என்ற டிரைவர் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றிவிட்டு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். தனது உயிரை பற்றி கவலைப்படாமல், அப்பகுதி மக்களை காப்பாற்ற வேண்டும் என துடித்தவர் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளார் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

 

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மலை கிராமங்கள் மொத்தமாக உருகுலைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் சூரல்மலையை சேர்ந்த 32 வயதாகும் பிரஜீஷ், கடந்த ஜூலை 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டதை அறிந்துள்ளார். உனே தனது உயிரை பற்றி கவலைப்படாமல், அப்பகுதி மக்களை காப்பாற்ற வேண்டும் என பிரஜீஷ் துடித்தார். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்திற்கு மத்தியில் பிரஜீஷ், தனது வீட்டில் இருந்த தாய், சகோதரர், பக்கத்து வீட்டில் நோய்வாய்ப்பட்டு இருந்த ஒருவர் மற்றும் சிலரை மீட்டுள்ளார். தொடர்ந்து அவர் தனது ஜீப் மூலம் அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றார்.

இதேபோல் சூரல்மலையில் நிலச்சரிவில் சிக்கிய சிலரை மீட்டு உயரமான மலைப்பகுதியில் பத்திரமாக ஜீப்பில் சென்று இறக்கி விட்டார். பின்னர் பிரஜீஷ் 3-வது முறையாக புதுமலை பகுதியில் மலை உச்சியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களை மீட்க மலை ஏற முயன்றார். அப்போது வெள்ளம் அதிகரித்து வந்தது. இதனால் அங்கு செல்ல வேண்டாம் என்று அவரிடம் நண்பர்கள் கூறியதோடு தடுத்து நிறுத்தி உள்ளார்கள் அதற்கு அவர் அங்கு பலர் சிக்கிக் கொண்டு உள்ளனர். அவர்களை மீட்க வேண்டும். என்னை தடுக்காதீர்கள். நான் எப்படியும் போகிறேன் என்று கூறி விட்டு ஜீப்பில் சென்றார்.

அங்கு தவித்த மக்களை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். முண்டக்கை-சூரல்மலை இடையே உள்ள பாலத்தை அடைவதற்குள், நிலச்சரிவில் ஜீப்போடு பிரஜீஷ் அடித்து செல்லப்பட்டார். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கிய தனது குடும்பம் மற்றும் மக்களை காப்பாற்றிய பிரஜீஷ் நிலச்சரிவில் சிக்கி இறந்து போனார்.

இதுகுறித்து ஜம்ஷீத் பள்ளிப்பிரம் என்பவர் கூறும்போது, பேராபத்திலும் கிராம மக்களை பிரஜீஷ் தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார். நிஜத்தில் சூப்பர் ஹீரோ பிரஜீஷ் தான். தனது உயிரை விட மற்றவர்களின் உயிரை மதித்தார் என்று கூறினார். 2018ம் ஆண்டு நடந்த வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்றியவர்களின் உண்மை கதைகளை தழுவி எடுக்கப்பட்ட 2018 திரைப்படத்தில் டேவின் தாமஸ் பலரையும் காப்பாற்றிவிட்டு இறந்து போவார். அதுபோல் தான் இப்போது ஜீப் டிரைவர் பிரஜீஷ் பலரையும் காப்பாற்றிவிட்டு இறந்து போயிருக்கிறார்.

மேலும் உங்களுக்காக...