திமுகவுக்கு எதிராக கட்சிகளை ஒரே அணியில் இணைக்கும் முயற்சியில் அமித்ஷா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, முதல் கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி என்ற ஒப்பந்தத்தை செய்து முடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தேமுதிக, பாமக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிருப்தியால் வெளியே வந்தால், அவர்களையும் உடனடியாக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உடனும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், சில நிபந்தனைகளுடன் சீமான் NDA-வில் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னணியில், கடைசியாக நடிகர் விஜய்க்கும் அமித்ஷா தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “நம் இரு கட்சிகளுக்கு இடையே கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், திமுகவை வீழ்த்திய பிறகு அவை குறித்து பேசி தீர்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு முக்கிய குறிக்கோள் திமுகவுக்கு எதிரான சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்,” என விஜய்க்கு செய்தி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
விஜய் தற்போது இதைப் பற்றி ஆலோசித்து வருவதாகத் தெரிய வருகிறது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளும் வரவிருக்கும் தேர்தலில் வலிமையாக இருப்பதால், விஜய் தனியாக போட்டியிடுவது பயனற்றதாகவும், அதனால் விஜயகாந்த் அல்லது கமல்ஹாசன் போன்ற நிலைமை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.
எனவே, அதிமுக கூட்டணியில் சேர்ந்து குறைந்தது 50 தொகுதிகளில் போட்டியிட்டு முதலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது சிறந்த வழி என விஜய்க்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.