தமிழ்நாடு அரசியல் களத்தில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆளும் திமுகவில் இணைவது என்பது தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வாக உள்ளது. ஆனால், இந்த அணிமாற்றம் அதிமுகவுக்கு சற்றும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும், ஏனெனில் அதிமுகவின் முக்கிய வாக்குகள் அனைத்தும் திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் தான். மாறாக, இது ஆளும் திமுகவுக்கே நீண்ட கால நோக்கில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது, அக்கட்சிக்கு பலவீனமாக தோன்றினாலும், அரசியல் ரீதியாக சில காரணங்களால் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை: அதிமுகவின் வாக்கு வங்கி என்பது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட கொள்கை அடிப்படையிலும், முன்னாள் தலைவர்களிளான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மீதான விசுவாசத்தின் அடிப்படையிலும் அமைந்தது. சில நிர்வாகிகள் கட்சி மாறுவதால், அடித்தள வாக்கு வங்கியில் பெரிய மாற்றம் ஏற்படுவதில்லை.
ஆளுங்கட்சியின் அதிகார கவர்ச்சியாலும், பயன் பெறும் நோக்கிலும் மட்டுமே இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்ற பொதுவான கருத்து நிலவுவதால், தொண்டர்கள் மத்தியிலும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அதிமுகவினர் அதிகளவில் வந்து சேருவது திமுகவின் பலத்தை அதிகரிப்பதாகத் தோன்றினாலும், நீண்ட கால நோக்கில் இது திமுகவின் அடிப்படை கட்டமைப்பையே அசைக்கக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
திமுக தனது கொள்கைரீதியான மற்றும் சித்தாந்த அடிப்படையை இழக்க நேரிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. தற்போது திமுக அமைச்சரவையில் உள்ள சுமார் 8 அமைச்சர்கள் ஏற்கனவே அதிமுகவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல முக்கிய நிர்வாகிகள் வந்து சேரும்போது, திமுக என்பது அதன் உண்மையான திராவிட சித்தாந்தத்தை விட்டு விலகி, அதிமுக சாயம் பூசிய ஒரு கலப்பட கட்சியாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இது, திராவிட இயக்க கொள்கைகளில் தீவிப் பிடிப்புள்ள தொண்டர்களை அதிருப்திக்கு உள்ளாக்கும். மேலும் காலங்காலமாக திமுகவுக்காக உழைத்தவர்கள் மத்தியில், புதிதாக சேரும் நபர்களால் கடும் எதிர்ப்பு எழ வாய்ப்புள்ளது.
புதிதாக வருபவர்களுக்கு பொறுப்புகள், பதவிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ஆகியவை வழங்கப்படுவது, தற்போதுள்ள மூத்த மற்றும் விசுவாசமான திமுக நிர்வாகிகளின் வாய்ப்புகளை பறிக்கும். இது உட்கட்சி பூசல்களுக்கும், விசுவாசமான தொண்டர்கள் தங்கள் உழைப்புக்கு மதிப்பு இல்லை என்று கருதி அமைதியாக ஒதுங்குவதற்கும் வழிவகுக்கும். இது தேர்தல் நேரத்தில் கட்சியின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும்.
அதிமுகவில் இருந்து வந்தவர்கள், மீண்டும் அரசியல் சூழல் மாறும்போது, அடுத்த ஆளுங்கட்சிக்கு சென்றுவிடுவார்கள் என்ற சந்தேகம் திமுகவின் விசுவாசமான தொண்டர்கள் மத்தியில் எழுகிறது. இது கட்சிக்குள் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். அதிமுக நிர்வாகிகளின் வருகையை ஆதரிக்கும் அதே வேளையில், உட்கட்சி விசுவாசத்தையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாதுகாக்க வேண்டிய நெருக்கடியான சூழல் உள்ளது.
புதிதாக வருபவர்களை வரவேற்கும் அதே நேரத்தில், கட்சிக்குள் உள்ள மூத்த தலைவர்களின் முக்கியத்துவத்தை குறைக்காமல் சரியான சமநிலையுடன் பதவிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும். கட்சிக்கு காலங்காலமாக உழைப்பவர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்ற உறுதியை தொண்டர்கள் மத்தியில் மீண்டும் விதைக்க வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு உள்ளது.
இல்லையேல், அதிமுகவின் பலவீனத்தால் திமுகவுக்கு கிடைத்த இந்த வரவு, நாளடைவில் அக்கட்சியின் அடித்தளத்திற்கே பலவீனமாக மாறி, கட்சிக்குள் ஒரு குழப்பமான சூழலை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
