தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளுக்கு பஞ்சமே இல்லை என்ற அளவில், ஒவ்வொரு ஆண்டும் பல புதிய கட்சிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. காமெடி நடிகர் கூல் சுரேஷ் கூட ஒரு கட்சி ஆரம்பிக்கும் நிலைக்கு அரசியல் மிகவும் கேலிக்குரியதாக மாறி வருகிறது. அதிகப்படியான கட்சிகள் நாட்டிற்கு கெடுதல் என்று கூறும் நேரத்தில், ஒரு நாட்டிலோ, ஒரு மாநிலத்திலோ இரண்டு கட்சிகள் மட்டும் இருக்க வேண்டும் என்றும், ஒன்று ஆளும் கட்சி, மற்றொன்று எதிர்க்கட்சி என்ற நிலை இருக்கும் போது மட்டுமே அரசியல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் பல அரசியல் நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர்.
ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை நூற்றுக்கணக்கில் கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து பேரம் பேசுவதற்காகவே இயங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமீபத்தில் சமூக வலைதளத்தில் நெட்டிசன் ஒருவர், “அதிமுக, திமுக தவிர அனைத்து கட்சிகளும் காணாமல் போக வேண்டும் என்றால், இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும்” என தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் திமுக கூட்டணி அமைத்து தலா 117 இடங்களில் போட்டியிட வேண்டும் என்றும், இரண்டரை வருடங்கள் மு.க. ஸ்டாலின், இரண்டரை வருடங்கள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த இரு கட்சிகள் இணைந்து போட்டியிட்டால், 234 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். இதனால் மற்ற அனைத்து கட்சிகளும் ஒரு சில வருடங்களில் காணாமல் போய்விடும் என்று அவர் ஐடியா முன்வைத்துள்ளார்.
ஆனால், இது சமூக வலைதள பதிவுக்கு மட்டுமே சாத்தியமானது, நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று பலர் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.