சென்னை: சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடி என கூறியதற்கு காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலை வீட்டை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதால் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் அனுமதி கேட்ட நிலையில் போலீஸார் மறுத்தனர். இதையடுத்து தடையை மீறி போராட்டம் நடத்த காங்கிரஸார் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணாமலையின் வீட்டின் முன்பு கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
என்ன பிரச்சனை: தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்த போது பாஜகவில் ரவுடிகள் சேர்வதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்தார். அப்போது அவர் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து விட்டு வெளியே வந்தவர் யாரும் எந்த மாநிலத்திலும் காங்கிரஸில் தலைவராக இல்லை. ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு பற்றிஅனைவருக்கும் தெரியும்.
செல்வப்பெருந்தகையை கைது செய்த போது குதித்து காலை உடைத்து கொண்டார். இன்று அவர் காந்தி வழியில் வந்தவர் என பேசுகிறார், இதற்கு நான் அவரை ரவுடி என கூறிவிட்டதாகவும் அவர் கோர்ட்டுக்கு போக போவதாகவும் தெரிவித்துள்ளார். வாருங்கள் பார்த்துக் கொள்ளலாம் என நான் சொல்கிறேன் என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை எனது பெயர் குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். ஆனால் அது முற்றிலும் பொய். உண்மைக்கு புறம்பாக அவதூறு பேசினால் என்ன வழக்கு பாயும் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு தெரியாதா? ]
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பேசுகிறார், தமிழக பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியலை 32 பக்க உளவுத் துறை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் பாஜக சேர்ந்த 261 குற்றவாளிகள் மீது 1977 வழக்குகள் இருக்கிறது. என்னை ரவுடி என கூறும் அண்ணாமலை எந்த காவல் நிலையத்தில் என்ன வழக்கு என் மீது உள்ளது என நிரூபிக்க முடியுமா.
என்னை அவதூறாக பேசியதற்கு அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார். இல்லாவிட்டால் எஸ்.சி., எஸ்.டி,. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும். பிறகு அண்ணாமலையால் ஜாமீனில் கூட வெளி வர முடியாது. அண்ணாமலையின் வாழ்க்கை தற்போது காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
இதற்கு அண்ணாமலை பதில் அளிக்கையில், எனக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கமே இல்லை. நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றார். இதையடுத்து அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் உருவபொம்மைகளை எரித்து போராடினார்கள். இந்த நிலையில்தான் அண்ணாமலையின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி கேட்டு அது மறுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து தடையை மீறி போராட்டம் நடத்த காங்கிரஸார் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணாமலையின் வீட்டின் முன்பு கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.