டெக்னாலஜி வரலாற்றில் பெரிய புரட்சி.. ஸ்மார்ட் வாட்ச் மாதிரியே வந்த புது சம்பவம்..

ஒரு காலத்தில் மாறி மாறி புறா அல்லது ஓலைகள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்ட மக்கள், பின்னர் கடிதங்கள் கொண்டு தகவலை பரிமாறிக் கொண்டனர். இதன் பின்னர் மெல்ல மெல்ல தொழில்நுட்ப யுகம் தொடங்கிய பின்னர் தொலைபேசி, செல் போன் உள்ளிட்ட விஷயங்களும் உருவாகின.

இதனால், பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மக்களிடம் கூட நினைத்த நேரத்தில் பேசும் வாய்ப்பு உருவாகி இருந்தது. இதன் பின்னர், கேமரா, வீடியோ கால் உள்ளிட்ட பல வசதிகள் பல மைல்களுக்கு அந்த பக்கம் இருக்கும் மக்களை கூட நெருக்கமாக உணர வைத்தது. கடிதங்கள், டெலி போன், செல் போன், டேப் என வளர்ச்சிகள் மாறிக் கொண்டே இருக்க தற்போது அதை விட எளிதான வசதிகளும் வரத் தொடங்கி விட்டது.

ஃபோனில் இருக்கும் அம்சங்கள் அனைத்தும் அடங்கியது போல ஸ்மார்ட் வாட்ச்களும் கடந்த சில ஆண்டுகளில் உருவாகி இருந்தது. நேரம் பார்க்கும் கைக் கடிகாரத்தில் அதை தாண்டி நிறைய விஷயங்கள் இருப்பது என்பதையும் உணர்த்தி இருந்தது ஸ்மார்ட் வாட்ச்சின் அம்சங்கள்.

உடல் ஆரோக்கியம் தொடர்பாக ஒருவர் எத்தனை தூரங்கள் நடக்கிறார், உடலில் இருக்கும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும், மாரடைப்பு அறிகுறிகள் குறித்த எச்சரிக்கைகள் என ஸ்மார்ட் வாட்ச் அம்சங்கள் ஹிட்டாக, இன்று கோடிக்கணக்கான மக்களும் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படி இருக்கையில் தான், தற்போது சாம்சங் நிறுவனம் மிக முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டி உள்ளது. வாட்ச்சில் புதுமையை நிறுவனங்கள் புகுத்த அதனை விட தற்போது ஒரு படி மேலே போயுள்ள சாம்சங் நிறுவனம், ஸ்மார்ட் மோதிரங்களை உருவாக்கி உள்ளது. டைட்டானியம் மூலம் இந்த மோதிரங்கள் உருவாக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், தண்ணீரில் பட்டாலும் பிரச்சனை ஆகாத வகையில் வாட்டர் ப்ரூஃப் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி ரிங், உடல் நிலையை எப்போதும் கண்காணிப்பதுடன் மட்டுமில்லாமல் இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு உள்ளிட்ட பல விஷயங்களும் சீராக இருக்கிறதா என்பதை கவனித்துக் கொண்டே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, உடல் வெப்ப நிலையை உணரும் சென்சாரும் இதில் பொருத்தப்பட்டுள்ள நிலையில் கேலக்ஸி AI என்ற நுண்ணறிவு தொழில்நுட்பமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘Find My Ring’ என்ற ஆப்ஷன் மூலம் இந்த ஸ்மார்ட் மோதிரத்தை எங்கேயாவது வைத்தாலும் கூட நாம் எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதன் விலை 5000 ரூபாயில் இருந்து இருக்கும் நிலையில் மூன்று நிறங்களிலும் உருவாக்கி உள்ளது. வெவ்வேறு அளவிலும் இந்த ரிங் வாங்கிக் கொள்ளலாம் என்பதும் சிறப்பம்சமாக பார்க்கப்படும் அதே சூழலில், இதில் மற்றொரு சிறந்த அம்சமாக ஒருமுறை சார்ஜ் செய்தாலே அடுத்த 7 நாட்களுக்கு பயன்படுத்துவதற்கான உத்தரவாதத்தையும் அவர்கள் கொடுத்துள்ளனர்.