மன்னார்குடி நகராட்சிக்கே ஆணையாளரான தூய்மை பணியாளர் மகள்.. ரியல் ‘சூர்ய வம்சம்’ கதை

Published:

திருவாரூர்: மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக பல ஆண்டுகள் வேலை செய்தவரின் மகள் இன்று அந்த நகராட்சிக்கே ஆணையாளராகி உள்ளார். சூர்ய வம்சம் படத்தில் வருவது போல் சாதித்துள்ள துர்கா பற்றி பார்ப்போம்.

சூர்ய வம்சம் படத்தில் கலெக்டராக வேண்டும் தேவயானி ஆசைப்படுவார். அவரை சொந்த பந்தம், உறவுகள் எல்லாம் ஏளனம் செய்யும். ஆனால் கணவராக வரும் சரத்குமாரின் ஊக்கத்தால், சாதித்து கலெக்டர் ஆவார் தேவயானி. அதுபோன்று ஒரு சம்பவம் ஆனால் கொஞ்சம் வேறுமாதிரி ரியலாகவே நடந்துள்ளது. தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றிய மன்னார்குடி நகராட்சியில் அவரது மகளே ஆணையாளராக மாறி இருக்கிறார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெருவைச் சேர்ந்த சேகர் என்பவருடைய மகள் துர்கா. சேகர் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். தூய்மை பணியாளர் சேகர் தனது மகள் துர்காவை பல்வேறு அவமானங்கள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் நன்றாக படிக்க வைத்துள்ளார்.

தனது மகள் துர்காவை அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு வரை படிக்க வைத்த சேகர், அதன் பின்னர் மன்னார்குடி ராஜ கோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் படிக்க வைத்துள்ளார். மகளை நன்றாக படிக்க வைத்த சேகர், அப்படியே அரசு வேலையில் சேர்க்க விரும்பினார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக 21 வயது இருக்கும் போதே, மதுராந்தகத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவருக்கு தனது மகள் துர்காவை திருமணம் செய்து வைத்துவிட்டார். எனினும் தனது மகளை அரசு அதிகாரியாக்க ஆசைப்பட்ட சேகர், தனது மகளை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகுமாறு ஊக்கப்படுத்தினார்.

இதனிடையே திருமணத்திற்கு பின்னர் துர்காவின் கணவர் நிர்மல் குமாரும் துர்காவை அரசு ஊழியராக்க விரும்பினார். அவர் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். நிர்மல் குமாருக்கும் துர்காவிற்கும் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். துர்காவின் கனவு அரசு ஊழியர் ஆக வேண்டும் என்பதுதான் அறிந்த கணவன் நிர்மல் குமார் , அவரை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயராகுமாறு தொடர்ந்து ஊக்கப்படுத்தி உள்ளார்.

கடந்த 2016 ல் குரூப் 2 தேர்வினை முதல் முறையாக எழுதி இருக்கிறார் துர்கா. ஆனால் தோல்வி அடைந்த துர்கா மனம் தளராமல், 2020ல் மீண்டும் குரூப் ஒன் தேர்வு உள்ளார். அதில் முதல்நிலை தேர்வு வரை வென்றவர், முதன்மை தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். எனினும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதிக்கொண்டே இருந்தார் துர்கா. இரண்டு குரூப் 4 தேர்வுகளை எழுதியும் தோற்றவர், கடந்த 2022ல் குரூப் 2 தேர்வு எழுதி முதல்நிலை தேர்வு எழுதி வெற்றி பெற்றார். பின்னர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற முதன்மை தேர்விலும் துர்கா வெற்றி பெற்றார்.

தொடர்ந்து 2024 ல் நடந்து முடிநத் நேர்முகத் தேர்வில் வெற்றி 30க்கு 30 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற துர்கா அண்மையில் மன்னார்குடி நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார். ஆனால் மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக இருந்த சேகர், தனது மகள் துர்கா அரசு அதிகாரி ஆவதை பார்க்காமலேயே ஆறு மாதம் முன்பு விபத்தில் இறந்து போனார்.

மேலும் உங்களுக்காக...