சேவாக்கிற்கு மீண்டும் தரமான பதிலடி கொடுத்த ஷகிப் அல் ஹசன்.. டி 20 உலக கோப்பையில் புதிய வரலாறு..

Published:

கிரிக்கெட் உலகை பொருத்தவரையில் அவ்வபோது இரு வீரர்கள் மாறி மாறி தங்களை பற்றிய விமர்சன கருத்துக்களை முன் வைப்பது வழக்கமான ஒன்றாகும். அதிலும் முன்னாள் வீரர்கள் பலரும் தற்போது ஆடிவரும் வீரர்கள் ஆட்டத்திறனை ஆராய்ந்து அதில் உள்ள நிறை, குறைகளையும் தெரிவித்து கடும் பரபரப்பையும் ஏற்படுத்துவார்கள்.

அந்த வரிசையில் ஆகாஷ் சோப்ரா, சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்சரேக்கர் உள்ளிட்ட பலரும் தற்போது ஆடி வரும் வீரர்களை பற்றி தெரிவிக்கும் கருத்துக்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கோபத்தையும், சர்ச்சையும் ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், பங்களாதேஷ் அணிக்காக தற்போது ஆடிவரும் சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசனை குறிப்பிட்டு சில விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.

ஷகிப் அல் ஹசன் டி20 போட்டிகளில் தடுமாறி வந்த நிலையில், எதற்கு நீங்கள் டி20 போட்டிகளில் ஆடுகிறீர்கள் என்றும், இளம் வீரர்களுக்கு வழிசெய்து நீங்களாகவே ஓய்வை அறிவிக்க வேண்டும் என்றும் சேவாக் கூறியிருந்தார். நீங்கள் ஒன்றும் ஆஸ்திரேலியா வீரர்களான ஹைடனோ, கில்க்றிஸ்டோ கிடையாது என்றும் சாதாரண பங்களாதேஷ் வீரராகஉங்களுக்கு என்ன தெரியுமோ அதை ஆட முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
.
ஷகிப் அல் ஹசனின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் எடுபடாமல் போயிருந்ததால் தான் இந்த கருத்தை சேவாக் முன் வைத்திருந்தார். அப்படி இருக்கையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் கடந்திருந்த ஷகிப் அல் ஹசன், பங்களாதேஷ் வெற்றி பெறவும் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

அந்த சமயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் சேவாக்கின் விமர்சனம் குறித்து கேள்வி கேட்கப்பட இதற்கு பதில் தெரிவித்த ஷகிப் அல் ஹசன், யார் சேவாக் என கேள்வி கேட்டு பின்னர் தனது பதிலை தெரிவித்திருந்தார். இப்படி கிரிக்கெட் உலகின் இரண்டு முக்கிய முகங்கள் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை சேவாக்கின் கருத்திற்கு மறைமுகமாக பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார் ஷகிப் அல் ஹசன்.

ஆல் ரவுண்டரான ஷகிப், பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும் சிறப்பாக ஆடி வரும் நிலையில், முதல் டி 20 உலக கோப்பைத் தொடர் முதல் கடந்த 17 ஆண்டுகளாக ஆடி வருகிறார். அப்படி இருக்கையில் ஒரு பந்துவீச்சாளராக டி 20 உலக கோப்பையில் அதிக டாட் பந்துகளை வீசிய பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடியின் சாதனையை முறியடித்த ஷகிப் அல் ஹசன் தற்போது 310 டாட் பந்துகள் வீசி முதலிடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார்.

வயதான வீரர் என ஷேவாக் விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து அதற்கு தக்க பதிலடியையும் ஷகிப் அல் ஹசன் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...