மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய உத்தரவு

Published:

சென்னை: வருகிற வடகிழக்கு பருவ மழை காலத்தில் தடையில்லா சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தெனனரசு உத்தரவிட்டார்.

சென்னை, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலத்தில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதனை செயல்படுத்துதல் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் காணொலி காட்சி மூலம் அமைச்சர் தங்கம் தென்னரசு அனைத்து தலைமை என்ஜினீயர்களுடன் நேற்று கலந்துரையாடினார்.

இதில் வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தி துறை மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷூ மகாஜன், இயக்குனர்கள், தலைமைப் பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடப்பு ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதம் நடந்தது.
கோவில்களில் புதைவடம்

இதுவரை, அறிவிக்கப்பட்ட 108 அறிவிப்புகளில், 1½ லட்சம் இலவச விவசாய மின்சார இணைப்புகள் வழங்குதல், 3 புதிய மின்சார பகிர்மான மண்டலங்கள் அமைத்தல் உள்ளிட்ட 28 முக்கிய அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு உள்ளன. இதுதவிர 78 அறிவிப்புகளுக்கான பணிகள் பல்வேறு நிலைகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு , பணிகளுக்கு தேவையான தளவாட பொருட்கள் மற்றும் மின்சார சாதனங்களை விரைந்து கொள்முதல் செய்து, பணிகளை விரைந்து முடித்து குறித்த காலத்திற்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வருகிற வடகிழக்கு பருவ மழை காலத்தில் தடையில்லா சீரான மின்சாரம் வழங்க வேண்டும். இதற்காக கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் ஒருங்கிணைந்த பராமரிப்பு பணிகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, 31 ஆயிரத்து 328 பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டு இருக்கிறது.

பராமரிப்பு பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின்சார நிறுத்தங்களின் போது, ஆங்காங்கே மின்தடை ஏற்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட, அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்சார நிறுத்த நேரம் குறித்து மின்சார நுகர்வோர்களுக்கு முன்னரே குறுந்தகவல் மூலமும், பத்திரிக்கை செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் உங்களுக்காக...