பாகிஸ்தான் அணிக்கு பயிற்சி தர தயார்.. ஆனால் அவமானப்பட விருப்பமில்லை: வாசிம் அக்ரம்

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சி வழங்க தயாராக இருந்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திடம் அவமானப்பட தயாராக இல்லை என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று…

wasim

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சி வழங்க தயாராக இருந்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திடம் அவமானப்பட தயாராக இல்லை என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் பாகிஸ்தான் அணி முதல் அணியாக வெளியேறியது. இது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பல முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணியை மேம்படுத்த பயிற்சியாளராக முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறியதாவது:

“பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்த வக்கார் யூனிஸ் அவமரியாதை செய்யப்பட்டதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு நான் உதவ விரும்புகிறேன், ஆனால்  பாகிஸ்தான் நிர்வாகத்திடம் அவமானப்பட நான் விரும்பவில்லை.

ஒரு பயிற்சி முகாமை தயார் செய்யுங்கள், அதில் நான் இலவசமாக பயிற்சி அளிக்கிறேன். எனக்கு சம்பளம் எதுவும் வேண்டாம். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் கீழ் பணிபுரிய முடியாது.

எனக்கு தற்போது 58 வயதாகிறது. இந்த வயதில் நான் அவமானத்தைக் கொண்டு செல்ல முடியாது; மன அழுத்தமான வாழ்க்கையில் செல்ல முடியாது. எனினும், பாகிஸ்தான் அணியை மேம்படுத்த என்னால் முடிந்த உதவிகளை செய்யத் தயாராக இருக்கிறேன். மேலும், அந்த உதவிகளை இலவசமாக செய்வதற்கும் தயார்,”

என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய கருத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு எவ்வாறு எடுத்து கொள்ளும் என்பதை  பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.