மரணமில்லாப் பெருவாழ்வு வாழணுமா..? இப்போ இதெல்லாம் நடக்குற காரியமா?

ஜனகமகாராஜா ஒரு முறை மரணதண்டனை பெற்ற ஒரு கைதியை அழைக்கிறார். உனக்கு வாழணும்னு ஆசை இருக்கான்னு கேட்கிறார். அதற்கு அவனும் ஆம் என்கிறான். உனக்கு நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதுல ஜெயிச்சா நீ…

ஜனகமகாராஜா ஒரு முறை மரணதண்டனை பெற்ற ஒரு கைதியை அழைக்கிறார். உனக்கு வாழணும்னு ஆசை இருக்கான்னு கேட்கிறார். அதற்கு அவனும் ஆம் என்கிறான். உனக்கு நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதுல ஜெயிச்சா நீ வாழலாம். இல்லன்னா உனக்கு மரணதண்டனைதான் என்கிறார். அவனும் சரி என்கிறான்.

அவனது தலை மொட்டை அடிக்கப்படுகிறது. அதில் ஒரு எண்ணை கிண்ணத்தை வைத்து நகரெல்லாம் சுற்றி வரச் சொல்கிறார். அப்போது ஒரு நிபந்தனை விதிக்கிறார். ஒரு சொட்டு எண்ணை கூட கீழே விழக்கூடாது என்று. ‘மொட்டைத்தலையில் எண்ணைக் கிண்ணம்… அடடே இது பெரிய சவால் தான். ஜெயிச்சிக் காட்டுவோம்’னு உறுதியோட நடக்க ஆரம்பிக்கிறான் கைதி.

அப்போது ராஜா அவன் நடந்து வரும் திசை எங்கும் வாண வேடிக்கை, ஊர்வலம், மேள தாளம், ஆடல் பாடல் என நிகழ்ச்சிகளை வைக்கிறார். இது எப்படி இருக்கு? ஆனால் அந்தக் கைதி அதை எல்லாம் பொருட்படுத்தாமல் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இருந்து ராஜா வைத்த போட்டியில் ஜெயித்து விடுகிறான்.

உடனே ராஜா அவனை விடுதலை செய்கிறார். அப்புறம் எப்படி வெற்றி பெற்றாய் என கேட்கிறார். ராஜா, என் கவனம் எல்லாம் எண்ணைக்கிண்ணத்தில் தான் இருந்தது. வேறு எங்கும் கவனம் செல்லவில்லை என்கிறான். இதுல இருந்து என்ன தெரியுது? அந்த மொட்டைத்தலையன் தான் நாம். எண்ணைக் கிண்ணம் தான் இறை சிந்தனை. நாம எப்பவும் அந்த சிந்தனையில் இருந்தால் சுகமாக வாழலாம்.

அப்பவும் இறைவன் நமக்கு பல சவால்களை வைப்பார். பணம், நகை, ஆடல் பாடல், ஆடம்பரம், நான் தான் பெரியவன் என்கிற ஆணவம் என பல சவால்கள் இருந்தாலும் இவற்றை எல்லாம் நாம் கடந்து ஜெயித்து விட்டால் மரணமில்லாப் பெருவாழ்வு அடையலாம். இது எனது குருநாதர் கிருபானந்த வாரியார் அடிக்கடி சொல்லும் கதை என்கிறார் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி.