பாரம்பரிய சிந்தனை: ஏதாவது விசேஷம்னா வாசலில் வாழை மரம் கட்டுறாங்களே…. ஏன்னு தெரியுமா?

By Sankar Velu

Published:

நம் முன்னோர்கள் என்றுமே பெரியவங்க தான். அவங்க எதைச் செஞ்சாலும், சொல்லி வைச்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். மேலோட்டமாப் பார்த்தா அது நமக்கு மூடநம்பிக்கை மாதிரி தெரியும். ஆனா… அதுல ஒரு அறிவியல் இருக்கும்.

நமக்கு பல வழிகளில் நன்மை தருவதாகவே இருக்கும். அந்த வகையில் நாம் பல விஷயங்களைச் சொல்லலாம். இப்போ நாம வீட்டு விசேஷங்களின் போது வாசல்ல வாழை மரங்கள் கட்டுவதைப் பார்த்திருப்போம். இது ஏன்னு தெரியுமா? படிச்சித் தான் பார்ப்போமே…

தமிழர் மரபில் மகிழ்ச்சியின் அடையாளமே வாழை மரங்களும், மாவிலைத் தோரணமும். அதனால்தான் நமது பண்டிகைகள்… சுப நிகழ்வுகளில் வாழைமரம், மாவிலை தோரணம் கட்டுகிறோம். இது ஏன் என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் அடுத்த சந்ததியினருக்குப் பக்குவமாக சொல்லித் தர முடியும்.

Banana tree
Banana tree

இந்துக்களின் சமயச் சடங்குகளில் ஒவ்வொரு விஷயத்திற்கும் அறிவியல் பூர்வமான காரணங்கள் உண்டு. தமிழர் திருவிழாக்கள், விஷேச நாட்கள், குடும்ப நிகழ்ச்சிகள் என எதுவானாலும், அதைக் கொண்டாடும்போது, வீட்டு வாசலில் மாவிலைத் தோரணமும், வாழை மரங்களையும் கட்டுகிறார்கள்.

வாஸ்து சாஸ்திர ரீதியாக எதிர்மறை சக்திகளை மாவிலை அகற்றுவதாக நம்புகிறார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் இருக்கலாம். அத்தகைய எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் தடை, தாமதங்களை அகற்றுவதற்காக, மாவிலையைப் பயன்படுத்துகின்றனர்.

தோரணமாகக் கட்டப்படும் மாவிலையில் துளைகள், பூச்சி அரிப்பு, காய்ந்திருப்பது போன்றவை இல்லாமல் முழுமையான இலைகளைத் தேர்வு செய்வதே நல்லது. தோரணமாகக் கட்டப்பட்ட மாவிலை காலப்போக்கில் அழுகவே அல்லது கெட்டுப்போகவோ செய்யாது. அதே தோற்றத்தில் பல நாட்கள் கழித்து, உலர்ந்து விடுகிறது.

அதுபோல மங்கலக் காரியங்கள் நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் இதில் அடங்கியுள்ளத் தத்துவம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும், நுழைவு வசாலின் இருபுறமும், குலையுடன் கூடிய வாழை மரம் கட்டப்படுகிறது.

அதாவது வாழை மரம் கட்டப்பட்ட வீடு, தெரு மற்றும் வாசல் வழியாக நுழைபவர்கள் தங்கள் மனதில் கெட்ட எண்ணம் கொண்டிருந்தால், அதை அகற்றும் விதத்தில் வாழை மரம் செயல்படுவதாக நம் முன்னோர்கள் நம்பினார்கள்.

vaazhai
vaazhai

மேலும் வாழை மரம் குலையை ஈன்று தனது வாழ்க்கையைப் பூர்த்தி செய்கிறது. அதன் கன்றுகள் கீழே முளைக்கின்றன. அதுபோல ஒருவரது குலம் வழிவழியாகத் தழைக்க வேண்டும் என்ற அடிப்படையை வாழை மரம் சுட்டிக்காட்டுகிறது. வாழை இலையில் உள்ள பச்சையம் மற்றும் ஈரப்பதம் காரணமாக, பந்தலுக்குள் நிலவும் வெப்பம் கட்டுப்படுத்தப்படும்.

அது மட்டுமல்லாமல், அக்காலத்தில் விழாக்களில் கலந்து கொள்பவர்களை ஏதேனும் விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால், கடிபட்டவர்களுக்கு முதலுதவியாகவும், விஷ முறிவாகவும் வாழைச்சாறு பிழிந்து அருந்தக் கொடுத்த பின்னரே தக்க மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படும்.

தற்போது பிளாஸ்டிக்கால் ஆன மாவிலைத் தோரணங்களும், பிளாஸ்டிக் வாழை இலைகளும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அவற்றால் நிச்சயமாக, உயிரோட்டம் உள்ள தாவர இலைகளின் பயனை அளிக்க முடியாது.

மேலும், இவற்றைக் குப்பையில் எரிந்த பின்னரும், சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே விழாக்கால தோரணம் கட்ட உயிரோட்டமுள்ள மாவிலை மற்றும் வாழை மரங்களைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

இத்தகைய விளக்கங்களை நாம் அறிவதோடு அடுத்த தலைமுறையான நமது குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்லி ஆரோக்கியமான, சுகாதாரமான சுற்றுபுறத்தை உருவாக்க உறுதி காண்போம்.