பஞ்சபூத தலங்களைக் கொண்ட கடம்பவனம்….! அன்னை மீனாட்சியின் கையில் பஞ்வர்ணக்கிளி….ஏன்?

By Sankar Velu

Published:

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அடடா இதுவரை நாம கேள்விப்பட்டதே இல்லையேன்னு நாம சொன்னாலும் பரவாயில்லை. மதுரைக்காரர்களுக்கே கூட பலருக்குத் தெரிந்திருக்காது.

இதைப் பற்றி நாம கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்ல சொல்ல அடடே…ஆமா…என்பார்கள். இப்படிப்பட்ட ஒரு அற்புதமான விஷயத்தை நாமும் தான் தெரிந்து கொள்வோமே…என்ன பார்க்கலாமா…!

மதுரை என்றாலே தூங்கா நகர் என்று ஒரு பெயர் உண்டு. நள்ளிரவிலும் சுறுசுறுப்பாக பஜார் கடைகள் இயங்கிக் கொண்டு இருக்கும். அதனால் தான் அந்த ஊருக்கு அப்படி ஒரு பெயர்.

இது வேறு எங்கும் இல்லாத அதிசயம். அதுமட்டுமா தமிழ்ச்சங்கம் வளர்த்த இடம் இது. பழம்பெரும் நகரம். மிகப்பெரிய வணிக ஸ்தலம். புராணங்களுக்குப் பெயர் போன ஊர். கூடல் நகர், கடம்பவனம் என்றும் சொல்வர்.

Meenakshi Amman
Meenakshi Amman

மதுரையில் உள்ள முக்கியமான ஊர்களில் ஒன்று செல்லூர். இங்குள்ள திருவாப்புடையார் கோயில் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. மதுரையின் மையப்புள்ளியாய் அமைந்துள்ளது சிம்மக்கல்.

இங்குள்ள பழைய சொக்கநாதர் கோயில் ஆகாய ஸ்தலம் ஆக உள்ளது. அதே போல மேல மாசி வீதியை அடுத்து அமைந்துள்ள இம்மையில் நன்மை தருவார் கோயில் நில ஸ்தலம் ஆகக் கருதப்படுகிறது. அதே போல தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் நெருப்பு ஸ்தலம்.

முக்தீஸ்வரர் கோவில்

பஞ்ச பூதங்கள் என்றாலே நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பது நமக்குத் தெரியும். இன்னும் ஒன்றைக் காணோமே என்று நீங்கள் கேட்கலாம். அது தான் காற்று. இதற்கான தலம் எங்கு உள்ளது என்று தெரியுமா? மதுரையில் பிரபலமான இடங்களில் ஒன்று தெப்பக்குளம். இங்குள்ள முக்தீஸ்வரர் கோவில் தான் காற்று ஸ்தலம்.

அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள். அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

நினைத்தாலே புண்ணியம்…!

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம், காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம், காசியில் இறந்தால் புண்ணியம், சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம், திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் என்று சொல்வார்கள்.

ஆனால் மதுரையில் பிறந்தாலும், வாழ்ந்தாலும், இறந்தாலும், வழிபட்டாலும்….ஏன் நினைத்தாலும் கூட புண்ணியம் தான். உங்களுக்குப் புண்ணியமாகப் போகும். மதுரையைக் கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள்.

Madurai Theppakulam
Madurai Theppakulam

சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை, காயா பாறை, பாடா குயில்….என்ன….இதெல்லாம்? என்று தானே கேட்கிறீர்கள். இவை எல்லாம் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.

சீறா நாகம் என்றால் நாகமலை, கறவா பசு என்றால் பசுமலை, பிளிறா யானை என்றால் யானைமலை,
முட்டா காளை என்றால் திருப்பாலை, ஓடா மான் என்றால் சிலைமான், வாடா மலை என்றால் அழகர்மலை,
காயா பாறை என்றால் வாடிப்பட்டி, பாடா குயில் என்றால் குயில்குடி….அடேங்கப்பா என்ன ஒரு ஊர் விளக்கம் என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா?