தீபாவளிப்பண்டிகை நெருங்க நெருங்க அளவில்லாத சந்தோஷம் அனைவருக்கும் வந்துவிடும். அந்தப் பண்டிகையின் இன்னொரு சிறப்பு கேதார கௌரி நோன்பு நாள் ஆகும். இதுபற்றியும், முருகப்பெருமானுக்கு 21 நாள் விரதம் இருக்கும் முறை பற்றியும் பார்ப்போம்.
முருகனுக்கு மாலை அணிந்து 48 நாள்கள் விரதம் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். இப்படி இருந்தால் நாம் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். 48 நாள்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் 21 நாள்கள் விரதம் இருக்கலாம். அதற்கு இணையான பலனைத் தான் இந்த 21 நாள் விரதமும் தரும்.
21 நாள் என்பது கேதார கௌரி நோன்புக்காக அம்பாள் எடுத்த ஒரு எண்ணிக்கை. அம்பாள் சிவபெருமானிடம் வரம் பெற வேண்டும் என்பதற்காகவும், தன்னில் சரிபாதியாக இறைவன் இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டாராம். அதற்காக கேதாரம் என்ற திருத்தலத்தில் அம்பாள் 21 நாள்கள் நோன்பு நோற்றாள். அதன் மூலம் இறைவனிடம் வரம் பெற்றாள். அவளுக்கு வேண்டிய பலன் கிடைத்தது.
எண்களின் ஆதிக்கத்தில் 21 என்ற எண் சிறப்புக்குரியது. எண்கணிதத்தின்படி 2 என்ற எண் சந்திரனோடும், 1 என்ற எண் சூரியனோடும் தொடர்புடையது. 3 என்ற எண் குரு என்ற கிரகத்தோடு தொடர்புடையது. 3 குருவின் ஆதிக்கம் நிறைந்தது.
இவற்றில் 2 என்ற எண் முன்னாலும், 1 என்ற எண் பின்னாலும் வருகிறது. நம் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு இருந்து கொண்டே இருக்கிறது. சந்திரன் எப்படி தேயுறார், வளருறாரோ அதே மாதிரி தான் எங்க வாழ்க்கையும் இருக்குதுன்னு சிலர் சொல்வாங்க. நிறைய பேருக்கு வாழ்க்கையில் நிலையான ஒரு வளர்ச்சி என்பதே இருக்காது.
சந்திரன் எப்படி தேய்ந்து வளருறாரோ அப்படித்தான் இவர்களது வாழ்க்கையும் இருக்கும். அப்படின்னா தேஜஸ் நிறைந்த சூரியன் போன்ற ஒளிமயமான வாழ்க்கை வேணும். அப்படி என்றால் என்னுடைய வாழ்க்கை சூரியன் மாதிரி பிரகாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 21 நாள் விரதத்தை மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட வேண்டும். நீங்கள் நினைத்ததை எம்பெருமான் நிறைவேற்றுவார்.
2ஐயும், 1ஐயும் கூட்டினால் 3. இதற்குரிய கடவுள் குருபகவான். அவரது அருளும் நமக்குக் கிடைத்தால் நாம் என்ன நினைத்துள்ளோமோ அதற்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். பொதுவாக கல்யாணம், குழந்தை இல்லை, வேலை வேணும்னு வேண்டுபவர்கள் தான் இந்த 21 நாள் விரதத்தை எடுப்பார்கள். இவை எல்லாவற்றிற்குமே குருவின் அருள் தேவை.
திருமண விஷயத்திலும் ஜாதகம் பார்க்கும்போது வியாழன் நோக்கம் வந்துட்டான்னு கேட்பதை நாம் பார்த்திருப்போம். அதனால் குருபகவானின் அருள் தேவை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பெண்களால் கண்டிப்பாக இருக்கக்கூடிய விரதம் தான் இந்த 21 நாள். எந்தக் கிழமையிலும் ஆரம்பிக்கலாம். சஷ்டி திதியில் ஆரம்பிப்பது விசேஷம். விசாகம், பூசம், கார்த்திகை நட்சத்திரத்தில் என முருகனோடு தொடர்புடைய நாள்களில் விரதத்தை ஆரம்பிக்கலாம். வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடலாம்.
காப்பு கட்டுவது அவரவர் சௌகரியத்தைப் பொருத்தது. அழகான முருகனின் திருவுருவப்படத்தை எடுத்து அர்ச்சனைக்கு அரளி, மஞ்சள் நிற மலர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை விரதம் எடுத்துக்கலாம்.
விரதகாலத்தில் காலை, மாலை 2 வேளையும் குளித்து விட்டு நெய் தீபம் ஏற்றி வேல் மாறலைப் பாராயணம் செய்து கொண்டு நீங்க என்ன நினைத்து வேண்டுகிறீர்களோ அதை மனமுருக நினைத்து வேண்டி வழிபட வேண்டும்.
பில்லி, ஏவல், சூன்யம், செய்வினை இருக்கு என்று நினைத்து கஷ்டப்படுபவர்கள் நாள் என் செய்யும் என்று தொடங்கும் அருணகிரி நாதரின் பாடலைப் பாராயணம் செய்யலாம். எளிமையாக சுவாமிக்கு பால், தேன் கலந்து நைவேத்தியம் வைங்க. காலையில் இப்படி வழிபட்டு அதே போல மாலையிலும் வழிபடுங்க. பூஜை முடிந்ததும் நைவேத்தியத்தை சாப்பிட்டுக் கொள்ளலாம்.
இப்படி 21 நாள் விரதம் இருந்து வழிபட்டால் நிச்சயமாக நாம் வேண்டியதை முருகப்பெருமான் நிறைவேற்றுவார். இறுதி நாளில் சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபடலாம். நம்பிக்கையோடு இருந்து வழிபட்டால் உங்களுக்குரிய பலனை முருகப்பெருமான் நிச்சயம் தருவார். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.