நோய் குணமாகக் காரணமே கந்த சஷ்டி கவசம். நாட்டுக்குக் கவசம் கோட்டை. கவசம் என்பது நம்மைப் பாதுகாப்பது. நம் உடலுக்குக் கவசம் எது என்றால் தெய்வ நாமங்களைச் சொல்வது தான். அதுதான் நம்மைக் காக்கும்.
‘காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியினில் நோக்க’ என்று உடலில் உள்ள அத்தனை அங்கங்களையும் காக்கச் செய்வது தான் இந்த கந்த சஷ்டி கவசம். அறுபடைவீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஆறு கவசம் இருக்கு. எல்லாமே அருமையாக இருக்கும். பாலன் தேவராயன் எழுதியது தான் இந்த கந்த சஷ்டி கவசம். தொண்டை மண்டலத்தில் வல்லூர் என்ற ஊரில் வீரராகவப்பிள்ளை என்பவர் இருந்தார். அவர் ஒரு வணிகர்.
அவரது பிள்ளை தான் தேவராஜன். அந்தக் காலகட்டத்தில் தேவராஜன் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் தமிழ் கற்றுக் கொண்டார். முருகனின் அற்புதங்கள் பல. அவற்றில் இதுவும் ஒன்று. தேவராஜன் பழனிக்கு ஒரு முறை சென்றாராம். அவர் பழனிக்குச் சென்று வரும்போது மனதிற்குள் துக்கம் வந்ததாம்.

போகிற வழி எங்கும் பசியால் வாடும் பிச்சைக்காரர்கள், பிணியுள்ளவர்களைப் பார்க்கும் போது மனதுக்குக் கஷ்டப்பட்டாராம். அப்படித் தான் அவரது உள்ளம் உருகி அந்தக் கோவில் மண்டபத்திலேயே படுத்துவிட்டாராம்.
அவரது கனவில் முருகப்பெருமான் வந்து ‘தேவராயா எனது மந்திரங்களை உள்ளே வைத்து மக்களுக்கு நோய் போகுமாறு நீ கவிதை புனைவாய். அவர்கள் அதைப் பாடட்டும். எல்லோரும் நன்றாக இருக்கட்டும்’ என்றாராம். ‘முருகா உன் கருணை இருந்தால் நான் பாட மாட்டேனா’ என்றாராம்.
அப்படி அவர் எழுதியது தான் அறுபடை வீடுக்கும் தனித்தனியாக எழுதிய கந்த சஷ்டி கவசம். அவர் காப்புச்செய்யுளோடு பாட ஆரம்பித்தார். அதாவது சஷ்டியை நோக்க சரவணபவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் என்று வரும்.
பாடலில் மூலமந்திரங்கள், பீஜாட்சரங்கள் எல்லாம் கொண்டு வந்திருப்பார். இந்த பீஜாட்சரங்கள் உள்ள பாடலைப் பாடும்போது நோய் நீங்கிவிடும். பீஜம் என்றால் விதை. அட்சரம் என்றால் எழுத்துக்கள். விதையைப் போன்ற மூல மந்திரங்கள்.
இதை உச்சரிக்கும்போது நேர்மறை ஆற்றலைத் தரும். கண்டிப்பாக அதற்கு பயன்கள் உண்டு. குடும்பம் நல்லாருக்கணும். அது அறிவோடு பிறக்கணும் என்பது எல்லாம் நடக்கும். தமிழ் நல்லா வரணும்னா கந்த சஷ்டி கவசத்தைப் படிக்க வேண்டும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



