பெண்கள் எப்போதுமே அணிகலன்கள், ஆபரணங்கள் அணிய மிகவும் ஆசைப்படுவார்கள். பேன்சி ஸ்டோர்களுக்குச் சென்றால் அவர்கள் கண்ணில் முதலில் படுவது அழகழகான கண்ணாடி வளையல்கள் தான். அப்படிப்பட்ட வளையல்களை நாம் வெறும் அழகுக்காக மட்டும் அணியவில்லை. அதனால் பல வியக்கத்தக்க நன்மைகளும் உண்டாகின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போமா…
வளையல் ஓசை தரும் லட்சுமி கடாட்சத்தைத் தருகிறது. பெண்களின் கைகளுக்கு அழகு தருவது வளையல். அதுவும் சுமங்கலிப் பெண்கள் வளையல் அணியாமல் இருக்ககூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.
அத்துடன், வளையல் அணியாமல் மற்றவர்களுக்கு உணவு பரிமாறக்கூடாது. சலசலக்கும் ஓசையுடன் கண்ணாடி வளையல் அணியும்போது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.
பெண்களுக்கு வளைகாப்பு செய்யும்போது இன்றும் சில கிராமப்புறங்களில் முதலில் வேப்பிலை கொழுந்தை வளையல் போல செய்து, இறைவன் முன் வைத்து வணங்கி, அந்த வேப்பிலை வளையலைதான் முதலில் அணிவிப்பார்கள். பிறகுதான் தங்க வளையலையே போடுவார்கள்.
ஏன் இப்படி செய்கிறார்கள் என்றால், கர்ப்பவதியாக இருக்கும் பெண்ணின் அருகில் தோஷம் இருப்பவர்களோ, வியாதிகளால் அவதிப்பட்டு வருகிறவர்களோ அல்லது பொறாமை மனம் படைத்தவர்களாலோ எந்த ஆபத்தும் அந்த பெண்ணுக்கு வராமல் இருக்க வேப்பிலை வளையல் அணிவிப்பார்கள். வேப்பிலை இருக்கும் இடத்தில் கிருமிகள் அண்டாது. துஷ்ட சக்தியும் அண்டாது.
வேப்பிலை வளையலைப் போல் கண்ணாடி வளையலும் மகத்துவம் வாய்ந்தது. கண்ணாடி வளையல் அணியும்போது மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அத்துடன் கலகல ஓசையால் எந்த துஷ்டசக்தியையும் நெருங்கவிடாது.
அத்துடன் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு மகத்துவம் உண்டு. அதிலும் பச்சை, சிகப்பு கண்ணாடி வளையல்களை அதிகம் விரும்புவார்கள். இதற்கு காரணம் பச்சை, மனதை அமைதிப்படுத்தும். வாழ்வை செழுமையாக்கும். சிகப்பு, கண்திருஷ்டியை அகற்றும் சக்தி கொண்டது.
மங்கள பொருட்களில் வளையலும் இடம் பெற்று இருக்கிறது. தங்கமோ, வெள்ளியோ அல்லது கண்ணாடி வளையலோ எதுவாக இருந்தாலும் சரி, பெண்கள் கண்டிப்பாக கைகளில் வளையலை அணிய வேண்டும். இதனால் லஷ்மி கடாட்சமும், மனதில் அமைதியும் உண்டாகும்.