கோதாதேவி அவதார ஸ்தலம் என சிற்ப்புக்கொண்ட திருவில்லிப்புத்தூருக்கு அப்பேர் வரக்காரணம் ஆண்டாள் அங்குதான் அவதரித்தாள். ஆண்டாளுக்கு கோதை என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதனால், ஆண்டாளை கோதாதேவி என வடநாட்டில் கொண்டாடுகின்றனர். இதனால் ஆடிப்பூரத்தன்று திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவ கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். பெரும்பான்மையான வைணவ கோயில்களில் திருவாடிப்பூரம் என10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் தேரோட்டமும் நடைப்பெறும். மங்கலமான இந்நாளில் திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் அம்மன் ஆலயங்களுக்கு சென்று மனதார வணங்கினால், மனம் போல் மாங்கல்யம், புத்திர பாக்கியம் கிடைக்கும்.
ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில்தான் அவதரித்தாள். ஆடி மாதத்தில் துளசி தோட்டத்தில் ஆண்டாளை கண்டெடுத்தார் விஷ்ணுசித்தர்,. ஆண்டாளின் இயற்பெயர் கோதை. விஷ்ணு பக்தரான விஷ்ணுசித்தரின் பாசுரத்தையும் விஷ்ணு பூஜையினையும் கண்டு வளர்ந்த ஆண்டாளுக்கு ஒருநாள் வீதியில் சென்று விளையாட ஆசை. ஆனால், துணைக்கு யாருமில்லையே என தந்தையை கேட்க, அவர் ஒரு விஷ்ணு பொம்மையினை தந்து அதனுடன் விளையாடு என்றார். அன்றிலிருந்து அந்த பொம்மையோடு விளையாடினாள், அதனோடே உண்டாள், உறங்கினாள், நாளடவில் அதன்மீது காதலும் கொண்டாள்.
வளர்ந்து பருவம் எய்தியதும் விஷ்ணுவையே மணப்பேன் என சபதம் எடுத்தாள். தந்தையின் பூஜைக்காக மலரினை தொடுத்து மாலையாக்கி தருவது ஆண்டாளின் வேலை. அப்படி தொடுக்கும் மாலை விஷ்ணுவுக்கு அழகு சேர்க்கிறதா என தினமும் தன் கழுத்தில் அணிந்து கண்ணாடியில் பார்த்து திருப்தி அடைந்த பின்னரே கோவிலுக்கு கொண்டுபோக தந்தையிடம் கொடுப்பாள்.
இப்படி மாலையை அணிந்து கண்ணாடியில் பார்க்கும்போது அதை விஷ்ணுசித்தர் பார்த்தார். மகளை கடிந்துக்கொண்டு, அவள் சூடி பழதாக்கிய மாலையை இறைவனுக்கு அணிவிப்பதை ஏற்றுக்கொள்ளாமல் புதியதாய் ஒரு மாலையை கட்டி பகவானுக்கு அணிவித்தார். ஆனால், பெருமாள அதை ஏற்காமல், கழண்டு விழ வைத்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும் “இறைவனையே ஆண்டவள்” என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார் . மேலும் கோதையை மணப்பெண் போல் அலங்கரித்து, ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வந்தால், அவளை ஏற்றுக்கொள்வேன் எனவும் பெருமாள் கூறினார்.
மார்கழி மாத கடைசி நாளன்று, அதாவது போகி பண்டிகையன்று, கோதையை மணப்பெண் போல அலங்கரித்து, சீர் வரிசை, உற்றார் உறவினர், மேளதாளத்தோடு ஸ்ரீரங்கத்துக்கு மகளை அழைத்துச்சென்றார் விஷ்ணு சித்தர். கோதையை கருவறைக்குள் வருமாறு அசரீரி ஒலித்தது. கோதை கருவறைக்குள் சென்றாள். கருவறைக்குள் சென்றவள் அப்படியே மறைந்தும் போனாள்… திருப்பாவை பாடலை இயற்றி தமிழை ஆண்ட கோதை பெருமாளை ஆள வைகுண்டம் அடைந்தாள்.
ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை வணங்குபவருக்கு நினைத்தபடி மணவாழ்வு அமையும்.