விநாயகர் சதுர்த்தி பிறந்தது இப்படித்தான்… யானைத் தலைக்கு ஈசன் கொடுத்த விளக்கம்

By Sankar Velu

Published:

Vinayagar Chaturthi: வினை தீர்க்கும் விநாயகர் எப்படி பிறந்தார்? அவருக்கு மனிதன் போல இல்லாமல் யானை முகம் வந்தது எப்படி? முதல் கடவுள் கணபதியை பார்வதி தேவி உருவாக்கிய தினத்தை விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். கணபதியைப் பார்வதி தேவியின் காப்பாளனாக உருவாக்கினாலும் உலகத்தின் நன்மைக்காக சிவபெருமான் யானை முகம் எடுக்க வைத்தார்.

கணபதி உருவான புராண கதையும், அவருக்கு எப்படி யானை முகம் வந்தது எப்படி என்றும் தெரிந்து கொள்ளலாம். ஒருமுறை கைலாசத்தில் ஈசன் இல்லாத போது பார்வதி தேவி நீராடச் சென்றார். காவலுக்கு நந்திகணத்தை நிற்க வைத்தார். அந்த நேரத்தில் சிவன் அங்கு வந்தார்.

நந்திகணம் ‘பார்வதி தேவி நீராடச் சென்றதாகவும் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டு காவலுக்கு வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அதனால் உள்ளே செல்ல வேண்டாம்’ என்று சொன்னார். அதற்கு சிவன் ‘பார்வதி தேவி என் துணைவி. இந்தக் கட்டளை என்னைத் தடுக்காது’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

அங்கு அமர்ந்திருந்த பார்வதி தேவி சிவபெருமானைப் பார்த்ததும் ‘யாரையும் அனுமதிக்காதே என்று கூறியிருந்தேனே’ என்றார். ‘நந்தி தேவன் என் சேவகன். அதோடு நான் உன் மணாளன் என்பதால் என்னை அவர் தடுக்கவில்லை’ என்றார்.

நந்தியின் செயலால் கோபம் அடைந்த பார்வதி தேவி அவர் செய்ததில் தவறு இல்லை என்று நினைத்தார். ஆனால் பாதுகாவலாக உள்ளவர் யாரையும் உள்ளே விடாதபடி அறிவாளியாகவும், பலசாலியாகவும், பாதுகாவலனாகவும் இருக்க வேண்டும் என்று பார்வதி தேவி நினைத்தார். அப்படி ஒருநாள் அவள் நீராடச்சென்ற போது அவள் பூசிக்கொண்டு இருந்த சந்தனத்தையும், நீரையும் எடுத்து ஒரு உருவம் செய்தார். அதற்கு உயிரையும் அவரே கொடுத்தார். அவரே கணபதி ஆவார்.

vinayagar, Easan
vinayagar, Easan

அப்படி ஒருநாள் பார்வதி தேவி நீராடச் செல்கையில் கணபதியை காவலுக்கு வைத்து விட்டுச் சென்றார். அப்போது அங்கு வந்தார் ஈசன். அவரை உள்ளே செல்ல கணபதி அனுமதிக்கவில்லை. நான் பார்வதியின் கணவர் என்று சொல்லியும் அனுமதிக்கவில்லை. அதனால் கணங்களை ஏவி அவரை அப்புறப்படுத்தச் சொன்னார் ஈசன்.

ஆனால் கணபதி அவர்களைத் துரத்தி அடித்தார். அதனால் கோபம் கொண்ட ஈசன் கணபதியின் தலையைத் தன் சூலாயுதத்தால் கொய்தார். அப்போது அங்கு வந்த பார்வதி தேவி இவன் நான் உருவாக்கிய பிள்ளை என்றார். அவனுக்கு உயிர் கொடுங்கள் என்றார். அதற்கு ஈசன் நடந்தவை அனைத்தையும் நான் அறிவேன் என்றார்.

உடனே பிரம்மதேவன் கணபதிக்கு உயிர் அளிக்க வடக்கில் தலை வைத்துப் படுத்திருக்கும் ஒரு பிள்ளையின் தலையை எடுத்து வாருங்கள் என்று கணங்களை அனுப்பினார். அவர்கள் தேடி அலைந்து ஒரு யானையின் தலையைக் கொண்டு வந்தனர். அந்தத் தலையைக் கணபதிக்கு ஈசன் பொருத்தி உயிர் அளித்தார்.

அப்படித் தான் யானை முகம் வந்தது. ‘இப்படி யானைத் தலையைப் பொருத்தி விட்டீர்களே’ என பார்வதி தேவி கேட்டார். அதற்கு ‘கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களைத் துன்புறுத்தி வருகிறான். அவனை மனிதர்களால் அழிக்க முடியாது. ஆண், பெண் சம்பந்தப்படாத ஒருவனால் தான் அது முடியும். அதனால் தான் ஈசன் கணபதியை அப்படி உருவாக்கினேன்’ என்றார். அவர் முழுமுதற் கடவுள்.

‘யார் பூஜை செய்தாலும் அதில் கணபதிக்குத் தான் முதல் பூஜையும், ஆரத்தியும் நடக்கும்’ என்று வரம் கொடுத்தார் ஈசன். அதனால் தான் கணபதி முழுமுதற்கடவுள் என்று நாம் வணங்குகிறோம். அவருக்கே முதல் பூஜையும் செய்கிறோம். வரும் விநாயகர் சதுர்த்தியை (செப்.7) ஒட்டி அவரது அருமை பெருமைகளை உணர்ந்து கொள்வோம்.