தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஒரு சிவாலயம் திருக்கடவூர். இதனை அடுத்துள்ள மயானமும் இங்கு புகழ்பெற்றது. இது தேவாரப்பாடல்களைப் பெற்றது.
மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் ரெயில்பாதையில் திருக்கடவூர் உள்ளது. இதன் கிழக்கே 1 கி.மீ. தூரத்தில் மயானம் உள்ளது. திருக்கடவூர் எமனையே உதைத்த தலம்.
திருக்கடவூர் மார்க்கண்டேயரைக் காக்கும் பொருட்டு எமனை உதைத்து அருளிய தலம். காலசம்ஹார மூர்த்தி இத்தலத்தில் தனியாக எழுந்தருளி அருள் வழங்கி வருகிறார். அவர் சன்னதிக்கு எதிரே எமன் உருவம் உள்ளது.
திருக்கடவூர் என்று பெயர் வரக் காரணம் என்னன்னு தெரியுமா? திருமால் முதலிய தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து தாங்கள் பெற்ற அமுத கடத்தை இங்கு கொண்டு வந்து வைத்ததால் கடவூர் என்று பெயர் பெற்றது. இப்போது திருக்கடையூர் என்றாகி விட்டது.
எமனிடம் இருந்து அவன் செய்யும் துன்பத்தைக் கடந்ததால் கடவூர் என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கு தேவர்கள் வைத்த அமுத கடமே சிவலிங்கமாக மாறியது. அதனால் இங்குள்ள இறைவனுக்கு அமுத லிங்கமாகவும், அமிர்த கடேஸ்வரர் என்றும் பெயர் வழங்கப்படுகிறது.
தல வரலாறு
பிரம்மன் ஞான உபதேசம் பெற விரும்பி இறைவனை வழிபட்டான். எப்போதும் இறைவன் வில்வ விதையைக் கொடுத்து இந்த விதை எந்த இடத்தில் ஒரு முகூர்த்தத்திற்குள் முளைக்கிறதோ அந்த இடத்தில் என்னை வழிபடுக என்று சொல்லி விட்டு மறைந்தார்.
பிரம்மன் இந்தத் தலத்தில் அதனை இட்ட போது குறித்த காலத்தில் விதை முளைத்து விட்டது. உடனே இத்தலத்தில் இறைவனுக்கு பூஜை செய்து வழிபட்டார். அதனால் வில்வ வனம் என்றும், இறைவனுக்கு வில்வனேஸ்வரர் என்றும் பெயர் உருவானது.
இத்தலத்திற்கு தலவிருட்சமாக பிஞ்சிலம் அதாவது சாதி முல்லை உள்ளது. மார்க்கண்டேயர் இத்தலம் வந்து இறைவனுக்கு அபிஷேகத்திற்கு கங்கை நீரைக் கொண்டு வந்தார். உடன் பிஞ்சிலம் வந்தது. அதனால் பிஞ்சில வனம் என்றும் கூறுவர். இது கோவிலின் உட்பிரகாரத்தின் தென்பகுதியில் உள்ளது.
அபிராமிபட்டர் அம்மையின் அருளால் செயற்கரிய செயல்களைச் செய்ததும் இந்தத் தலத்தில் தான்.
எமபயம் உள்ளவர்கள் இந்தத் தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால் அவர்களது பயம் நீங்கும். இவர்களும், நோய் நொடிகளால் வேதனைப்படுபவர்களும் இத்தலத்திற்கு வந்து இறைவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் செய்தால் நலம் பல பெறலாம்.
இத்தலத்திற்கு வருகை தரும் பெரும்பாலான பக்தர்கள் ஆயுள் ஹோமம், சஷ்டி அப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி நிம்மதி அடைகின்றனர்.
மிருத்யுஞ்சய ஜபம், ஹோமம், பாராயணம், அர்ச்சனை இத்தல மூர்த்திக்கு செய்து வருவது மிகுந்த பலனைத் தரும்.
இந்த கோவில் திருக்கடவூரில் மேற்கு நோக்கிய சன்னிதானத்துடன் அழகான தோற்றத்தில் அமைந்துள்ளது.
திருவீதி உள்ளிட்ட பஞ்சப் பிரகாரங்கள் அமைந்து மேலும் சிறப்பைத் தருகின்றன. அம்மையார் சன்னிதானம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மேற்புறமும், கீழ்புறமும் கோவிலில் ராஜகோபுர வாயில்கள் உள்ளன.
கோவிலின் முதல் பிரகாரத்தில் இடதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இதை பிரசங்க மண்டபம் என்றும் சொல்வர். முனீஸ்வரர் தங்கி இருப்பதால் முனீஸ்வரர் கோபுரம் என்றும் சொல்லப்படுகிறது.
கீழ்கோபுரம் அருகில் திருக்குளம் அமைந்துள்ளது. இங்கு தென்மேற்கு மூலையில் அம்மையாருக்குத் தனி ஆலயம் அமைந்துள்ளது.
இரண்டாம் பிரகாரத்தில் உள் நுழைந்ததும் இடது புறம் அலங்கார மண்டபமும், ஈசான மூலையில் யாக சாலையும் அமைந்துள்ளது. தென்மேற்கில் தேவஸ்தானமும், களஞ்சியம், வாகன அறைகளும் உள்ளன.
மூன்றாம்பிரகாரத்தில் நுழைந்ததுமே திருமாளிகைப் பத்தி மண்டபங்கள் அழகாய் காட்சி தருகின்றன. சுவாமி சன்னிதியில் சங்கு மண்டபம் உள்ளது. மகா மண்டபத்தில் காலசம்ஹார கடவுள் வீற்றிருக்கிறார்.
இத்தல இறைவனுக்கு அமிர்த கடேஸ்வரர், அமுத கடேசர், வீரட்டேசுவரர், அமுதகடோற்பவர், காலசங்கரர் என்று பல பெயர்கள் உள்ளன. மார்க்கண்டேயருக்கு அருள்புரிய சிவலிங்கத் திருவுருவில் இருந்து வெளிப்பட்டதால் சிவலிங்கத்தில் வெடிப்பும், பாசத்தழும்பும் உள்ளன.
இங்கு அமிர்தபுஷ்கரணி தீர்த்தம் உள்ளது. கோவிலுக்கு மேற்புறம் ஆனைக்குளம் உள்ளது. மார்க்கண்டேய தீர்த்தம் அமைந்துள்ளது.
இங்கு வந்து இறைவனை வழிபட்டவர்கள் பலர் உண்டு. அவர்களில் குங்கிலியக் கலயர், காரி நாயனார், சப்த கன்னிகள், நவதுர்க்கை, சிபி, பிரமன், வாசுகி, சோமசருமன், சிவருமன், ஏமகிரீடன், ரத்தினகைடன், சந்திரபூடணன்.
சித்திரை மாதம் பிரமோற்சவம் நடைபெறுகிறது. ஆறாம் நாளில் கால சம்ஹாரம் நடைபெறுகிறது. கார்த்திகை சோமவாரங்களில் நடைபெறும் சங்காபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.