கிருஷ்ணஜெயந்தியா, கோகுலாஷ்டமியா… இரண்டும் ஒன்று தானா..? அப்படின்னா வழிபடுவது எப்படி?

Published:

கோகுலாஷ்டமியை ஸ்ரீஜெயந்தி என்றும் கிருஷ்ணஜெயந்தி என்றும் சொல்வார்கள். நாராயணனின் தசாவதாரங்களில் சிறந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். அப்படிப்பட்ட அழகான அவதாரங்களில் எம்பெருமான் அநேக தத்துவங்களை உணர்த்தியுள்ளார். இது ஒரு பண்டிகை மட்டுமல்ல. வரம் கொடுக்கக்கூடிய அற்புதமான திருநாள்.

குழந்தைக்காகக் காத்திருப்பவர்கள் இந்தக் கிருஷ்ணனை வரவேற்றுக் கோலம் போட்டு பகவானுக்கு நைவேத்தியம் பண்ணி ஆராதனை பண்ணி வழிபாடு பண்ணினா கண்டிப்பாஅடுத்த ஆண்டுக்குள் குழந்தைப் பேறு வாய்க்கும். இது பலருக்கும் அனுகூலமான உண்மை.

சிறைச்சாலையில் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரத்தில் வசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்த 8வது குழந்தை தான் கிருஷண அவதாரம்.

இந்த நட்சத்திரமும் திதியும் ஒன்றாக சேர்ந்து வரும்போது கிருஷ்ணஜெயந்தியாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த நட்சத்திரமும் பல ஆண்டுகளில் திதியும் ஒன்றாக வராது. அதனால் பெரியவர்கள் அஷ்டமி என்ற திதியைக் கணக்கு வைத்துக் கொண்டு அதைக் கோகுலாஷ்டமியாகக் கொண்டாடினர். ஆலயங்களில் ரோகிணி நட்சத்திரத்தன்று ஸ்ரீஜெயந்தி என்றும், கிருஷ்ணஜெயந்தி என்றும் கொண்டாடுவார்கள்.

இந்த ஆண்டு 26.8.2024 அன்று காலை 9.13 மணி முதல் 27.8.2024 அன்று காலை 7.30 மணி வரை கோகுலாஷ்டமி அமைந்துள்ளது. அதனால் 26ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் வழிபாட்டை வைத்துக் கொள்ளலாம்.

கிருஷ்ணஜெயந்தியைக் கொண்டாடுபவர்களுக்கு 26ம் தேதி இரவு 9.41 மணி முதல் 27ம் தேதி இரவு 8.54 மணி வரை ரோகிணி நட்சத்திரம் முடிகிறது. அதனால் அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரத்தையும் இணைத்து வழிபட நேரம் இருக்கா என்றால் இருக்கு. 27ம் தேதி காலை 6 மணி முதல் 7.20 மணிக்குள் வழிபட வேண்டும்.

கிருஷ்ணரின் கொண்டாட்டங்களை மாலை நேரத்தில் கொண்டாடுவது வழக்கம். அப்போது தான் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று ஆயர்பாடி அமர்க்களமாக இருந்ததாம். அதனால் மாலையில் வழிபடுபவது சிறப்பு. குழந்தைக்காக விரதம் இருப்பவர்கள் 27ம் தேதி காலை 6 மணி முதல் 7.20க்குள் வழிபட்டால் ரொம்பவும் விசேஷமான பலனைத் தரும்.

Kjt
Kjt

கிருஷ்ணரின் படத்தை எடுத்து சுத்தம் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்காக விரதம் இருப்பவர்கள் குட்டி கிருஷ்ணரின் விக்கிரகத்தை வாங்கிக் கொள்ளுங்கள். வீட்டில் மனைப்பலகையில் வைத்துக் கொள்ள வேண்டும். கிருஷ்ணரின் பாதங்களைப் போட வேண்டும். நம்ம வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை பாதம் போட வேண்டும். கிருஷ்ணர் நம் வீட்டில் எழுந்தருள்கிறார் என்று அர்த்தம்.

கிருஷ்ணருக்கு நல்ல மலர்களால் அலங்கரித்து துளசியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவருக்கு மிக முக்கியமானது பலகாரங்கள் தான். வெண்ணை என்றால் சாதாரண விஷயம் கிடையாது. பாலுக்குள்ளே இருந்து வெண்ணை தயாரிக்கப்படுகிறது.

அது எப்படி என்றால் பாலைப் பக்குவமான சூட்டில் இருக்கும்போது உறை ஊற்றுகிறோம். அதன்பிறகு அதை உரியில் எடுத்து வைக்கிறோம். விடியற்காலை அதில் உள்ள ஆடைகளை எல்லாம் எடுத்துப் போட்டுக் கடைஞ்சால் அதில் இருந்து வெண்ணை வரும்.

அது போல நாம் இளம்வயதிலேயே இறைவனின் மந்திரத்தை உறைவிட்டு வைராக்கியம் என்ற உரியிலே விட்டு பக்தி என்ற மத்தையும் ஞானம் என்ற கயிற்றையும் வைத்துக் கடைந்தால் இறைவன் என்கிற வெண்ணை நம்மிடத்தில் இருந்து வெளிப்படுவார். அதுல என்ன சுவாரசியம் என்றால் மத்தில் தான் வெண்ணைப் படியும். கயிற்றில் படாது.

அது போல பக்தியில் தான் இறைவன் வெளிப்படுவார். அதனால் பகவான் வெண்ணைத் திருடித் தின்றது நமது ஆன்மாவை இறைவன் ஏற்றுக் கொண்டதற்குச் சமம். நிறைய பட்சணங்கள் பண்ண முடியவில்லை என்றாலும் 5 பொருள்களில் ஒன்றாவது வைங்க. பால், தயிர், மோர், வெண்ணை, நெய் இவற்றில் ஒன்றாவது வைக்கலாம்.

பாலைக் காய்ச்சி நாட்டுச்சர்க்கரைப் போட்டு சுவாமிக்கு நைவேத்தியமாக வைக்கலாம். சுவாமிக்கு உரிய நாமங்களைச் சொல்லி வழிபடலாம். ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே… ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற மந்திரத்தை 108 தடவை சொல்லலாம். கிருஷ்ணருக்குப் போட்ட கோலத்தை மறுநாள் துடைத்துக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...