உங்கள் துன்பங்களுக்கு விடுதலை….! சோமவார பிரதோஷத்திற்கு இத்தனை மகிமையா…?!

By Sankar Velu

Published:

இன்று (03.04.2023) பங்குனி மாத வளர்பிறை நாள். சோமவார பிரதோஷம். அப்படி என்றால் என்ன? சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது.

சோமவார பிரதோஷம்

சோமன் என்றால் சிவன், திங்களை முடிமேல் சூடிய சிவனுக்கு சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை உகந்த தினம். சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று சிவ தரிசனம் செய்யலாம்.

Sivan
Sivan

பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி தினத்தன்று களைப்பில் பள்ளி கொண்டது துவாதசியில். உலகமெலாம் உய்வுற தாண்டவம் ஆடியது திரயோதசி நாளில். அந்தி சாயும் நேரத்தில். இந்தக் காலத்தைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம்.

பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

சிவ தாண்டவம்

Siva Thandavam
Siva Thandavam

சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். இந்த நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் சிவன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம்.

சாரூப்ய பதவி

பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய் பயம் போன்றவை விலகும். 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவ கணங்களாகி விடுவார்கள். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும், கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

சிவபெருமான் தாண்டவமாடியதைப் பார்த்த நந்திதேவர், ஆனந்த மிகுதியால் உடல் பருத்தாராம். அதன் காரணமாக, கைலாயமே மறைந்ததாம். அதனால்தான், பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.

நந்தியின் சிறப்பு

சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இருப்பதுதான் நந்தி. சிவனைப் பார்க்க செல்பவர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும், வேண்டுதல்களையும் சொன்னால் நந்திபெருமான் சிவனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை.

அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யும். நந்தியின் காதில் சொல்லும் நடைமுறை என்பது எல்லா கோவில்களிலும் இருக்கிறது.

Nanthi pagavan
Nanthi pagavan

பெரிய கோவிலில் உள்ள சிறிய நந்தியிடம் சொன்னால் மகா நந்திக்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு.

சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் 1000 சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.

துன்பங்களுக்கு விடுதலை

Abishekam
Abishekam

மாலை சிவன் கோவிலிற்கு சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்

அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் வாங்கித் தரலாம். சிவ பெருமானுக்கும், நந்திக்கும் தூய பசும்பால் அபிஷேகத்திற்கு வாங்கித் தரலாம்.

கொண்டக்கடலை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் என உங்கள் வசதிக்கேற்ப ஏதாவது ஒன்றை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் படைக்கலாம். அதன்பிறகு அதைப் பக்தர்களுக்கு கொடுக்க, தடைகள் நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

காப்பரிசி நிவேதனம்

பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும்.

நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சாற்றி, நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்வது சிறப்பு.