நரசிம்மர் என்றாலே ஒரு தைரியமான, உத்வேகமான, மனதில் புத்துணர்வைத் தரும் அற்புதமான நாமம் தான் நரசிம்மர். இவர் நாளை என்று ஒத்திப்போடாமல் இப்போதே அருளை வழங்கக்கூடியவர். சிம்மம் என்றாலே அழகு தான். அதனால் தான் சிங்கத்தைக் காட்டுக்கு ராஜாவாக நாம் பார்க்கிறோம்.
அக்காரக்கனி
ஆண்டாள் நாச்சியார் நரசிம்மரை சீறிய சிங்கம் என்று சொல்வார். ஆழ்வார்களும் அற்புதமாகப் பாடியுள்ளனர். அவர்களில் திருமங்கையாழ்வார் அக்காரக்கனி என்று வாழ்த்தியுள்ளார்.
அக்காரக்கனி என்பது ஒரு வகை மூலிகை. இதனால் அவர் செய்யப்பட்டதால் அப்பெயர் பெற்றதும், ஒரு நல்ல பழத்தின் சுவை போல ரொம்ப இனிமையானவர். அதே நேரம் உக்கிரமான தெய்வமும் அவர்தான்.
தல வரலாறு
நரசிம்ம மூர்த்தி உக்கிரமாக தூணில் இருந்து வெளிப்பட்டு ஹிரண்ய ராட்சசனை வதம் செய்து பிரகலாதனுக்கு அருள் புரிந்தார். அந்த நரசிம்மரின் தரிசனம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஆங்காங்கே அவர் தரிசனம் கொடுத்த இடங்கள் தான் தற்போது சிறப்பு தலங்களாக விளங்குகின்றன.
அப்போது வாமதேவ முனிவர் உள்பட பல முனிவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த நரசிம்மரோட தரிசனம் எங்களுக்குக் கிடைக்கணும்னு வேண்டுறாங்க. அதற்காகத் தவம் செய்கிறார்கள்.
ஒரு காலத்தில் அசுரர்களின் கூட்டம் நல்லவர்களை பரிசோதிக்கிறது. முதலில் கால, கேய அசுரர்கள், கும்ஹோதரர் என்ற அசுரர் ஆகியோர் இவரைத் தொல்லைப் படுத்தினர்.
பெரும் தொல்லைக்கு ஆளான முனிவர்கள் நரசிம்மரை மிகவும் வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள். அப்போது அந்த இடத்தில் ஒரு அதிசயம் நிகழ்கிறது.
நரசிம்மரின் கருணையால் நாராயணர் சங்கும் சக்கரமும் கொடுத்து ஆஞ்சநேயர் இவர்களை வதம் செய்தார் என்பது வரலாறு.
அதே போல ராமர் சங்கும் சக்கரமும் கொடுத்து ஆஞ்சநேயர் இவர்களை வதம் செய்ததாகவும் வரலாறு உண்டு. ஆனால் ஆஞ்சநேயர் சங்கையும், சக்கரத்தையும் தாங்கி அசுரர்கள் கூட்டத்தை வதம் செய்தார் என்பது பொதுவான வரலாறு.
ஆஞ்சநேயர் ராமாவதாரத்தின் போது கடமைகளை முடித்ததும் வைகுண்டத்திற்கு வா என அழைப்பு வந்தது. அப்போதும் கூட நான் பூலோகத்தில் தான் இருப்பேன். ராமபிரானுக்கு பணி செய்து கிடப்பதே என் கடமை என்று உறுதியாகச் சொன்னார்.
யோக நிலையில் காட்சி
ஆஞ்சநேயரும் சேர்ந்து நரசிம்மரோட தரிசனம் கிடைக்க வேண்டும் என நினைக்கிறார். இந்த மலை மீது அழகாக நரசிம்மர் காட்சி கொடுத்தார். அப்போது அவர் யோக நிலையிலேயேக் காட்சி கொடுக்கிறார்.
அனுமனைப் பார்த்து சொல்கிறார். நீ என் மலைக்குப் பக்கத்திலேயே இருந்து பக்தர்களுக்கு அனுக்கிரஹம் பண்ணு என்றும் சொல்கிறார். அந்த மலை மீது யோக நரசிம்மராக எழுந்தருளியுள்ள பெருமாள் அங்கு வரும் பக்தர்களின் குறைகளை எல்லாம் போக்குகிறார்.
கண் திறக்கும் யோக நரசிம்மர்
இந்த மலையில் ஒரு சிறப்பு உண்டு. முனிவர்களுக்கு யோக நிலைக்கு ஏற்ப யோக நரசிம்மராகக் காட்pசி அளிக்கிறார். 11 மாதங்கள் சுவாமி கண்மூடி யோக நிலையில் இருக்கிறார்.
ஆனால் இந்தக் கார்த்திகை மாதம் மட்டும் சுவாமி நெற்றிக் கண்ணைத் திறந்து அதன் மூலம் பக்தர்களுக்கு அனுக்கிரஹம் புரியும் வரலாறு இந்த மலைக்கு மட்டுமே உண்டு. அதனால் தான் எத்தனையோ நரசிம்ம ஆலயங்கள் இருந்தாலும் இங்கு தனி சிறப்பு உண்டு.
இந்த மலைக்கு வந்து நாம் சோளிங்க நரசிம்மரை வழிபட்டால் நமக்கு எத்தகைய துன்பங்கள் இருந்தாலும் அது நிவர்த்தி ஆகி விடும். இந்த மலைக்கு கடிகாச்சலம் என்று பெயர்.
கடிகை என்றால் நேரம். அதாவது நாழிகை. ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். அதனால் இந்த மலையில் ஒரு கடிகை நேரம்…அதாவது 24 நிமிடங்கள் தங்கி நரசிம்மரை வழிபட்டால் மோட்சம் கிடைத்துவிடும்.
தல சிறப்பு
மலைமேல் ஏறி இந்த நரசிம்மரை தரிசிப்பது அவ்வளவு சுலபமல்ல. மிகப்பெரிய வைராக்கியம் உள்ளவர்களுக்கே சாத்தியம். 1305 படிகள் ஏறி நரசிம்மரைப் பார்க்கும்போது அவ்ளோ நேரம் ஏறிய களைப்பு தெரியாது. அதே போல பக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் சங்கு சக்கரத்தோடு காட்சி தருகிறார். இந்த மலையில் ஆஞ்சநேயரும் தியானத்தில் இருப்பது தான் சிறப்பு.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது.