பெரியது எது? அரசரின் சந்தேகத்தை தீர்த்த அந்த இளைஞர் யார்?

Published:

முன்பு சோழர்களின் ஆட்சி காலத்தில் அநபாய சோழன் என்ற அரசர் ஆட்சி புரிந்து வந்தார். அவரது அரசவையில் கல்வியில் சிறந்த பல அமைச்சர்கள் இருந்தனர். ஒருமுறை அரசருக்கு திடீரென ஒரு சந்தேகம் ஏற்பட்டது. இந்த உலகை விட பெரியது எது? கடலை விட பெரியது எது? மலையை விட பெரியது எது? என்ற கேள்வி அரசரின் மனதில் தோன்றியது

அவரின் சந்தேகத்தை அங்குள்ள அமைச்சரிடம் கேட்க அவருக்கும் அதற்கான விளக்கத்தை சரியாக கொடுக்க முடியவில்லை. அரசரோ அமைச்சர் இதற்கான பதிலை கட்டாயம் கூற வேண்டும் என்று ஆணையிட்டு அமைச்சரை அனுப்பி விட்டார்,

தன் இல்லத்திற்கு வந்த அமைச்சருக்கு இதற்கான பதில் தெரியாமல் குழப்பத்துடனே இருந்தார். பதில் கூறாவிட்டால் அரசரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்ற அச்சத்தில் இருந்த தன் தந்தையாரின் மனநிலையை புரிந்து கொண்ட அந்த அமைச்சரின் மகன் தந்தையின் குழப்பத்திற்கான காரணத்தை கேட்டார். அமைச்சர் அரசவையில் நடந்ததையும் அரசரின் சந்தேகங்கள் பற்றியும் மகனிடம் எடுத்துரைக்க அந்த இளைஞரும் அவ்வளவு தானே நாளை அரசவைக்கு நான் வருகிறேன் இதற்கான பதில் என்ன என்பதை நான் கூறுகிறேன் என்று கூறினார்.

 

மறுநாள் அரசவைக்கு வந்த அந்த இளைஞர் அரசர் கேட்ட கேள்விகளுக்கு விடையாக மூன்று திருக்குறள்களை கூறினார்

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. ( ஒருவருக்கு தேவைப்படும் பொழுது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் உதவியானது கடலை விட பெரியது)

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. ( ஒருவருக்கு தேவை ஏற்படும் பொழுது சரியான சமயத்தில் செய்யும் உதவியானது இந்த உலகத்தை விட பெரியது).

நிலையில் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. ( உறுதியான உள்ளமும் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவருடைய உயர்வு மலையை விட பெரியது)

இப்படி அரசரின் சந்தேகங்களை திருக்குறள் மூலம் தீர்த்த அந்த இளைஞரை கண்டு ஆச்சரியப்பட்டு போனார் அரசர். இள வயதாக இருந்தாலும் அவரை தன்னுடைய அரசவையின் முதன்மை அமைச்சராக நியமித்தார். அந்த இளைஞர் வேறு யாரும் அல்ல அருள்மொழி தேவர் என்ற இயற்பெயர் கொண்ட சேக்கிழார் பெருமான் ஆவார்.

sekkilar 1

உலகெலாம் என்று கடவுள் அடி எடுத்துக் கொடுக்க அதை முதலடியாகக் கொண்டு திருத்தொண்டர் புராணம் பாடியவர்.  இந்த திருத்தொண்டர் புராணத்தை பெரிய புராணம் என்றும் கூறுவர். சோழ மன்னர்களை  மக்களை நல்வழிப்படுத்த சிவனடியார்களின் பெருமையை பேசும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...