திருச்செந்தூரில் இரவு தங்கி முருகப்பெருமானை இப்படி வழிபடுங்க… வேண்டுதல் நிச்சயம் நடக்கும்..!

By Sankar Velu

Published:

அந்தக்காலத்தில் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் மாசித்திருவிழா நடக்கவில்லை. காரணம் அங்கு கொடிமரம் இல்லை. அதனால அங்கு கொடி மரம் வைக்கணும்னு முடிவு எடுக்கிறாங்க. அதற்காக ஆறுமுக ஆசாரி தலைமையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள காக்காச்சி மலையில் போய் கொடி மரம் வெட்ட வேண்டும் என தீர்மானிக்கிறார்கள்.

இதற்காக திருச்செந்தூர் மந்தை அருகே உள்ள அம்மனை வேண்டலாம்னு அங்கு வந்து சாமி கும்பிட வர்றாங்க. அப்போ ஆறுமுக ஆசாரி மட்டும் கோவிலுக்குள் போய் வணங்குறாரு. அப்போ அம்மனின் கண்களில் கண்ணீர் வழிகிறது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார் ஆறுமுக ஆசாரி. ‘அம்மனே, ஏன் உனக்கு இந்த நிலை?’ என கேட்கிறார்.

‘நீங்கள் செய்யக்கூடிய காரியம் நல்ல காரியம் தான். ஆனால் அங்கு உன்னைத் தவிர உன்னுடன் இருக்கும் வேறு யாரும் உயிருடன் திரும்ப மாட்டார்கள். இதை நினைத்துத் தான் எனக்கு கண்ணீர் வருகிறது. இதை அவர்களிடம் சொல்லி விடாதே. இது ஆண்டவன் கட்டளை’ என்கிறது அந்த அம்மன்.

TDR
TDR

அப்புறம் முருகன் மேல பாரத்தைப் போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். வழியில் சின்னதம்பி மரைக்காயர் என்ற மந்திரவாதியைப் பார்க்கிறார். அவரையும் உடன் அழைக்கிறார். ஆனால் அவரது மனைவி அவரைத் தடுக்கிறார். ‘நேற்றுத் தான் ஒரு பயங்கர கனவு கண்டேன். உங்க உயிருக்கு ஆபத்து வருகிறது. அதனால நீங்க இந்த கொடி மரம் வெட்டுற வேலையா போக வேண்டாம்’ என்கிறாள். ஆனால் அவர் அதைக் கேட்காமல் ஆறுமுக ஆசாரி உடன் செல்கிறார். 21 மாட்டு வண்டிகளில் போறாங்க.

காக்காச்சி மலையில் ஒரு அற்புதமான வாசனையுடன் கூடிய சந்தன மரம் நிற்கிறது. அதையே வெட்ட முடிவு எடுக்கிறாங்க. ஆறுமுக ஆசாரி சின்னத்தம்பி மரைக்காயரிடம் இந்த மரத்தை நாம் வெட்டலாமா என கேட்கிறார். அவரும் மை போட்டு பார்க்கிறார். அடி மரத்துல சுடலை மாடனும், மேல் முனையில் சங்கடகரஹாரனும் இருக்கிறாங்க. 21 தேவதைகளும் இருக்கு என்கிறார்.

அதனால் தேவதைகளை விரட்டியதும் மரத்தை வெட்ட முடிவு எடுக்கிறாங்க. அதனால் மை போட்டு மந்திரம் சொல்கிறார். மற்றவர்களைக் கோடாரி கொண்டு வெட்டச் சொல்கிறார். கோடாரி மரத்தில் பட்டதும் அது அவர்கள் பக்கம் திரும்பி அவர்களது கழுத்தில் வெட்டுகிறது. அத்தனை பேரும் இறந்து விடுறாங்க. மந்திரவாதியும் இதுல ரத்தம் கக்கி இறந்துடுறாரு.

21 தேவதைகளும் கொடி மரத்தை விட்டு இறங்கி ஆறுமுக ஆசாரியை விரட்டுது. அவரு உயிருக்குப் பயந்து ஓடிப் போய் தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரி முத்து அய்யனார் கோவில்ல போய் தஞ்சம் அடைகிறார். அப்போ அய்யனார் தேவதைகளை சமாதானப்படுத்துறார். ‘முருகன் எனது சகோதரன். நல்ல காரியத்துக்காகத் தானே போறீங்க’ என்கிறார். அதற்கு. ‘நாங்க பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு இருக்கிறோம்.

அதனால எங்களை விரட்டாம வெட்டுங்க’ என தேவதைகள் சொல்றாங்க. அதன்படியே செய்றாங்க. கொடிமரமும் தயாராகுது. அதனால தான் மாசித்திருவிழாவின் போது முதன் முதலா சுடலை மாடனுக்கும், சங்கடஹரகாரனுக்கும் ஆடு வெட்டி படைச்சிட்டுத் தான் தேரே ஓடுமாம். அந்தக் கொடி மரம் தான் இப்போ வரை இருக்கு. அதை வழிபட்டால் தான் முழுபலன் கிடைக்கும்.

காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் 5 மணி முதல் 6 மணிக்குள் கொடி மரத்துக்குப் பூஜை நடக்கும். அதை வழிபட்டதும் முருகப்பெருமானை வழிபடுங்க. நீங்க நினைச்ச காரியம் நடக்கும். அதே போல இரவு திருச்செந்தூரில் தங்குபவர்களும் இப்படி வழிபட வேண்டும். அவர்களுக்கு நினைச்ச காரியம் நிச்சயம் நடக்கும்.