“சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கல”ன்னு சொல்வாங்க. இது சும்மா சொல்ல வில்லை. நமக்கு அனுக்கிரகத்தைக் கடவுளே செய்தாலும் அதை நாம் வேறு ஏதேதோ கேட்டுத் தவற விட்டு விடுகிறோம். வாங்க விவரம் என்னன்னு பார்ப்போம்.
சாமிகிட்ட எப்படி வேண்டுவது என ஏதாவது சாஸ்திரங்கள் சொல்லி இருக்குதா? வடமொழியில் அற்புதமாக சில பாடல்களைச் சொல்லி இருக்கிறார்கள். ஒரு மனிதன் கருவில் உருவாவது முதல் கைலாச பதவியை அடைவது வரை அனைத்து தேவைகளையும் காலந்தோறும் வேண்டுகிறான்.
அது வயதுக்கேற்ப மாறுபடும். தேவையான சூழல்களையும் சாமி தந்து கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் சாமியே வரம் கொடுத்தாலும் நாம் அதைப் பெற தவறி விடுகிறோம். அபிராமி பட்டர் “தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவருக்கே…” என்றொரு பாடலில் வெகு அழகாக சொல்வார்.
மனம் தடுமாறும்போது மிகச்சிறந்த குருமார்கள் அதாவது இறை அருளாளர்கள் தத்தம் பாடல்களின் வழிநின்று நமக்கு நல்வழியைக் காட்டுகிறார்கள். ஆகமங்கள், வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வேதங்களில் எதை எதை எல்லாம் கேட்க வேண்டும் என்ற சமகம் என்ற பகுதியில் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது.
பாலராவாயன் என்பது ஞானசம்பந்தருக்குப் பேரு. “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணின் நல்ல கதிக்கி யாதுமோர் குறைவில்லைக் கண்ணின் நல்லஃதுனுங் கழுமல வளநகர்ப் பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை மிகுந்ததே” என்கிறார்.
அதுபோன்ற அற்புத பதிகங்கள் உள்ளன. மாணிக்கவாசகர் இப்படி சொல்கிறார். “வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுவதும் தருவோய் நீ, வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ, வேண்டி என்னைப் பணி கொண்டாய்! வேண்டி நீ யாது அருள் செய்தாய், யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும் உன் தன் விருப்பு அன்றோ!” என்கிறார் மாணிக்கவாசகர்.
நீ வந்து கேட்காமலேயே அனுக்கிரகம் பண்ணி இருக்கே. நான் வந்து புத்திசாலித்தனமா எதையாவது கேட்டு மாட்டிக்கப்போறேன். அதனால எல்லாமே நீயே அனுக்கிரகம் பண்ணி இருக்கே என்கிறார். ஞானம், உலகியல் இன்பம், மோட்சம் சம்பந்தமாக அருளாளர்கள் பாடிய பாடல்களை நாம் சிந்தித்து அதன் பொருள்சார்ந்து நாம் படித்தால் எந்த சூழலில் எதை எல்லாம் நாம் இறைவனிடம் கேட்க வேண்டும்? இறைவன் அதை எப்படி நிறைவேற்றுவார் என்பது தெரிய வரும். அதனால பாடல்களின் பொருளை நுட்பமாக உணர்ந்து பாட வேண்டும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.




