நம் நாட்டில் இருபெரும் புண்ணிய தலங்கள் என்றால் வடக்கே காசியையும், தெற்கில் ராமேஸ்வரத்தையும் தான் சொல்வார்கள். எவ்வளவு பக்தர்கள்? எவ்வளவு வெளிநாட்டவர்கள் என்று பார்க்கும் போது பிரமிப்பாகத் தான் இருக்கிறது.
தினசரி இங்கு திருவிழா கோலமாகத் தான் கூட்டம் வந்து போகிறது. காசி யாத்திரை சென்றவர்கள் தெற்கே உள்ள புண்ணிய தலமான ராமேஸ்வரத்திற்கும் யாத்திரை சென்று அங்குள்ள தனுஷ்கோடி சென்று தீர்த்தமாடுவர். அப்போது தான் காசி யாத்திரை நிறைவடையும் என்பது அவர்களது நம்பிக்கை.
இங்குள்ள ராமநாதப் பெருமானுக்குத் தினசரி கங்கையில் இருந்து நீர் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடக்கிறது.
வடநாட்டு மக்கள் இந்தியாவில் நான்கு தலங்களையே புண்ணி தலங்களாக எடுத்துக் கொள்கின்றனர். அவற்றில் 3 வடக்கில் உள்ளது. அவை பத்ரிநாதம், ஜகந்நாதம், துவாரகநாதம். இவை மூன்றும் வைணவ தலம். ஆனால் ஒன்று மட்டும் சிவதலமாக தெற்கே உள்ளது. அது தான் ராமேஸ்வரம்.
அதே போல நம் நாட்டில் உள்ள சிவதலங்களில் மிக முக்கியமானது ராமேஸ்வரம். எப்படி என்றால் பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் ராமபிரானால் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது இங்கு தான் உள்ளது. அது எப்படி என்று பார்க்கலாமா…
ராமாயணப் போருக்குப் பிறகு தனது தோஷத்தைப் போக்க ராமபிரான் சிவலிங்க பிரதிஷ்டைக்காக ஒரு நேரம் குறிப்பிட்டு அனுமனை சிவலிங்கம் கொண்டு வருமாறு காசிக்கு அனுப்புகிறார்.
ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அவர் வந்து சேரவில்லை. உடனே சீதா தேவி கடற்கரையில் மணலையே சிவலிங்கமாக்கிக் கொடுத்தாள். ராமபிரானும் அந்த சிவலிங்கத்தையே குறிப்பிட்ட நேரத்தில் பிரதிஷ்டை செய்து பூஜையை முடித்தார்.
காலதாமதத்துடன் வந்த அனுமனுக்கோ அதைக் கண்டு கோபம் வந்து விட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை பெயர்த்தெடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. உடனே அவரை சமாதானப்படுத்தி அவர் கொண்டு வந்த சிவலிங்கத்தை ராமலிங்கம் அருகிலேயே பிரதிஷ்டை செய்து வைத்தார். அதற்கே முதல் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளை இட்டார்.
இந்த லிங்கம் ராமலிங்கத்திற்கு வடபக்கம் உள்ளது. இது காசியில் இருந்து வந்ததால் காசி விஸ்வநாதர் ஆனது. இத்தலத்தில் முதல் பூஜை இவருக்குத் தான் நடக்கிறது. ராமபிரானால் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கமே ஜோதிலிங்கங்கங்களில் ஒன்றாக விளங்குகிறது.