பெருமாளின் அவதாரங்கள் பத்து வகை அதாவது தசாவதாரம் என்பது நமக்குத் தெரியும். அதே போல காக்கும் கடவுளான திருமாலின் சயனக் கோலங்கள் பத்து வகைப்படும். திருமாலும் பெருமாளும் வேறு வேறா என்றால் இல்லை.
இருவரும் ஒருவரே. வைணவ மதத்தை வழிபடுபவர்கள் வணங்கக்கூடிய தெய்வம் தான் பெருமாள். இவர் சயனத்தில் இருக்கும் நிலைகள் மட்டுமே மொத்தம் பத்து நிலைகள் உள்ளன. அவை என்னென்ன? எங்கு அமைந்துள்ளது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
ஜல சயனம்
107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது. ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு பள்ளி கொண்டுள்ள திருமாலின் சயனக்கோலம் மிக மிக முக்கியமானது. அதாவது மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஜல சயனத்தில் பெருமாள் பள்ளி கொண்டுள்ளார்.
தல சயனம்
63 வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் மல்லையில் அமைந்துள்ளது. மாமல்லபுரம் செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருமால் சயனக்கோலமான தல சயனம்.
இங்கு திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
புஜங்க சயனம் (சேஷ சயனம்)
முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் உள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனம் (சேஷசயனம்) கோலத்தில் பள்ளி கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
உத்தியோக சயனம்
12 வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அமைந்துள்ளது. திருமால் சயனக்கோலமான உத்தியோக சயனம் (உத்தான சயனம்).
வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார்.
வீர சயனம்
59 வது திவ்ய தேசமான திருவள்ளூரில் அமைந்துள்ளது. திருவள்ளூர் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டம். இங்கு திருமால் வீர சயன கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
திருமால், ‘நான் எங்கு உறங்குவது?’ என்று சாலிஹோத்ர முனிவரை கேட்டபோது, அவர் காட்டிய இடம் தான் திருஎவ்வுள்ளூர். இதுவே பின்னாளில் மருவி திருவள்ளூரானது. இங்கு வீரராகவப் பெருமாள் வீர சயனத்தில் காட்சி தருகிறார்.
போக சயனம்
40 வது திவ்ய தேசமான சிதம்பரத்தில் அமைந்துள்ளது. சிதம்பரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருமால் போக சயன கோலத்தில் பள்ளி கொண்டுள்ளார்.
இங்கு புண்டரீகவல்லி தாயார் சமேதராய் கோவிந்தராஜப் பெருமாள் போக சயனத்தில் காட்சி தருகிறார்.
தர்ப்ப சயனம்
105 வது திவ்ய தேசமான திருப்புல்லாணியில் அமைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி அமைந்துள்ளது. இங்கு திருமால் தர்ப்ப சயன கோலத்தில் பள்ளி கொண்டுள்ளார். இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார்.
பத்ர சயனம்
99 வது திவ்ய தேசமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அமைந்துள்ளது. இங்கு திருமால் பத்ர சயன கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
இங்கு வடபத்ர சாயி என்னும் வடபெருங்கோவிலுடையானான ஸ்ரீரங்கமன்னார் பெருமாள் வடபத்ர சயனத்தில் காட்சி தருகிறார். பத்ர என்பது ஆலமரத்து இலையை குறிக்கிறது.
மாணிக்க சயனம்
61 வது திவ்ய தேசமான திருநீர்மலையில் அமைந்துள்ளது. திருமால் மாணிக்க சயன கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இங்கு திருமால் அரங்க நாயகி சமேத அரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார்.
இத்தலத்தின் சிறப்பாக, இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிக்கலாம்.
உத்தான சயனம்
திருமாலின் உத்தான சயனக்கோலம் திருக்குடந்தையில் அமைந்துள்ளது. குடந்தை என்றால் கும்பகோணம். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளத.இங்கு திருமால் அரவணையில் உத்தான சயனத்தில் காட்சி தருகிறார்.