திருமணம் ஆகாதவர்களுக்கு வரப்பிரசாதமான பங்குனி உத்திரம்… நாள், நேரம், விரதமுறை இதுதான்!

சில வழிபாடுகளில் பல விஷயங்கள் நடக்கிறது. அப்படி ஒன்று தான் பங்குனி உத்திரம். பல தெய்வீக திருமணங்கள் நடைபெற்ற அற்புதமான விரதநாள் இது. இந்த நன்னாளில் தான் சிவன் பார்வதி திருமணம், ராமர், சீதா,…

சில வழிபாடுகளில் பல விஷயங்கள் நடக்கிறது. அப்படி ஒன்று தான் பங்குனி உத்திரம். பல தெய்வீக திருமணங்கள் நடைபெற்ற அற்புதமான விரதநாள் இது. இந்த நன்னாளில் தான் சிவன் பார்வதி திருமணம், ராமர், சீதா, ஆண்டாள் திருமணம் நடைபெற்ற நாள். முருகர், தெய்வானையை மணந்த நாள். சரஸ்வதியை பிரம்மதேவர் தன் நாவில் ஏற்றுக்கொண்ட நாள். மகாலட்சுமிக்கு மகாவிஷ்ணு தன் மார்பில் இடம் தந்த நாள். சபரிமலையில் எழுந்தருளக்கூடிய ஐயப்பனின் அவதார நாள். இவ்வளவு சிறப்பு பெற்றது இந்த பங்குனி உத்திரம்.

கல்யாணம் ஆகணும்னு காத்து இருப்பவர்களுக்கு இது வரப்பிரசாத நாள். இது குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கும் உன்னதமான நாள். முருகப்பெருமானை வழிபடுபவர்கள் பால் குடம், காவடி எடுத்து இந்த நாளில் வழிபடுவர்.

விரதம் என்பது எத்தனை நாள் சொல்லப்பட்டதோ அத்தனை நாள் இருங்க. அதிகமாக நீட்டித்து இருக்கணும்னா ஏதாவது வேண்டுதல் இருக்கும். வீட்டில் நாம் விரதம் இருப்பது பங்குனி உத்திரம் நாளில் மட்டும் தான். பெரியவங்க சொன்னதை மட்டும் கடைபிடித்தால் போதும். அதுவே சிறந்த வழிபாடு.

1.4.2026 புதன்கிழமை அன்று பங்குனி உத்திர திருநாள் வருகிறது. பௌர்ணமி அன்று காலை 7.38மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை 7.57 மணிக்கு முடிகிறது. உத்திரம் நட்சத்திரம் 31.3.2026ம் தேதி மாலை 3.58மணிக்கு ஆரம்பித்து மறுநாள் மாலை 4.37மணி வரை உள்ளது. அதனால் 1ம் தேதி பங்குனி உத்திர திருவிழாவைக் கொண்டாடுவது சிறப்பு.

காலையில் வழிபடுபவர்கள் 1.4.2026 அன்று 6மணி முதல் 7.20மணி வரை வழிபடலாம். அதன்பிறகு 9.15மணி முதல் 10.35மணி வரை வழிபடலாம். மதியம் இலை போட்டு படையல் வைத்து வழிபடுபவர்கள் 1.35 மணி முதல் 2 மணி வரை வழிபடலாம். மாலை 6மணிக்கு மேல் வழிபாடு செய்து கொள்ளலாம். அவரவர் வசதிக்கேற்ப இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.