ஓம் மந்திரம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று என்று பலர் சொல்ல நாம் கேட்டதுண்டு.’ஓம்’ என்பது பிரணவ மந்திரம். திருவிளையாடல் படத்திலே முருகர் தன் தந்தை சிவனுக்கு காதில் ரகசியமாக ஓதுவது போல ஒரு காட்சி வரும். அது ஓம் முக்கியத்துவத்தை குறிக்கும் நிகழ்வு. தந்தைக்கு ஞான உபதேசம்
என்று பக்தி மார்க்கத்தில் கூறுவார்கள். ‘ஓம்’ என்பது பிரணவ மந்திரம். உ அ ம் என்ற மூன்று எழுத்துகளின் கூட்டு ‘ஓம்’ என்று கூறுவார்கள்.
பிரபஞ்ச ஆற்றலின் ரகசியம் என்று கூறுவார்கள்.எளிமையாக புரிந்து கொள்ளலாம். சிவமாகிய சுத்தவெளியின் தன் மாற்றத்தால், விண் தோன்றியது. விண்துகளை உயிர் என்று கூறுவார்கள். அந்த சிவமாகிய பேராற்றல் அடங்கிய சிறு துகள்தான் விண்.
உ அ ம்.
உ உயிராகிய அந்த சுழலும் விண்துகள், அ என்று ஓங்குகிறது பிரபஞ்சம் முழுவதும் விரிவடைகிறது. பின் ம் என்ற தன் மூலமாகிய இறை நிலையில் அடங்குகிறது. இதை ஒரு வட்டம் என்று கூறுவார். எங்கிருந்து தோன்றியதோ, அங்கேயே சென்று முடிவடைய வேண்டும் என்ற பிரபஞ்ச தத்துவத்தின் குறியீடே ஓம்.
தியானம் : தியானம் பயின்றவர்கள் மட்டும் அல்ல எல்லோருமே இதை எளிதில் புரிந்து கொள்ளலாம். கம்பசூத்திரம் அல்ல. மனம் ஓடி கொண்டே இருக்கும். மனம் எங்கிருந்து புறப்படுகிறதோ அதன் அடித்தளம் இறைநிலை.
அந்த மனம் அலைவதை விட்டு தன் மூலத்தில் அறிவில் ஒடுங்கினால்
இறை நிலை. சுருக்கமாக இப்படி கூறலாம். அலையிலே மனம் மனிதன்.
நிலையிலே அறிவு இறைவன். அறிவு, நிலை ஆனால் அடக்கம். இறைவனோடு சங்கமித்தல்.
நல்ல ஆழ்ந்த தூக்கத்திலே, எண்ணமற்று இறைவனோடு சங்கமிக்கிறோம். அது நமக்கே தெரியாத மயக்க நிலை. அதுவே விழிப்பு நிலையில் அடங்கினால் யோகம். ஓம் ஒரு ஆழ்ந்த தத்துவம். ‘ஓம்’ என்று ஆழ்ந்து சொல்லும் போது கவனித்தால்,மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு, தண்டுவடத்தில் உள்ள எல்லா ஞான சக்கரங்களையும் தொட்டு, தலை முழுவதும் ஆற்றல் பரவி, நெற்றி ஆக்கினையை தொட்டு, நாசியின் வழியாக ‘ம்’ என்று அழுத்தமாக ஆற்றல் வெளியேறும். முறையாக செய்தால் உடலே அதிர்வலைகளால் அதிரும்.
ஓம் மந்திரத்தை சொல்ல சொல்ல, மனம் அலை நீளம் குறைந்து, இறையோடு ஒன்றி, அமைதியும் சாந்தமும் இயல்பாக மலரும். மனதை ஒருமைபடுத்த அற்புத மந்திரம். ‘ஓம்’ என்று சொல்வடிவில் எழுதும் போது, அது விநாயகர் உருவத்தை தெய்வக் குறியீடு ஆகவும் வெளிப்படுத்தும் என்றும் கூறுவார்கள்.