எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தீரணுமா… முருகப்பெருமானின் இந்த தரிசனத்தைப் பாருங்க..!

Published:

சில நேரங்களில் வாழ்க்கையில் நமக்கு பிரச்சனை வருகிறது. அது சின்னதா வந்துட்டு, உடனே போயிட்டுன்னா அதைப் பற்றியும் கவலை இல்லை. கடவுளைப் பற்றியும் கவலை இல்லை. ஆனா சில பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் பாருங்க. அப்போ நமக்கு ஒண்ணுமே செய்ய முடியாது.

உடம்பெல்லாம் சோர்ந்து போயிடும். ஏன்டா வாழறோம்… எங்கடா போகன்னு தோணும். யாரு காலடா பிடிக்கறதுன்னு தெரியாம திணறிக்கிட்டு வருவோம். அந்த மாதிரி நேரத்துல முருகப்பெருமான் தான் நம்மைக் காக்கும் கடவுளாக விளங்கக்கூடியவர். அவரோட விஸ்வரூபத்தைப் பற்றியும், அந்த தரிசனம் பற்றியும் பார்ப்போம்.

முருகப்பெருமான் கோவில்களில் காலையில் நடைபெறும் தரிசனத்திற்கு விஸ்வரூப தரிசனம் என்று பெயர். சில கோவில்களில் விஸ்வரூபம் என்றும், சிலவற்றில் திருவனந்தல் என்றும் எழுதியிருப்பாங்க. திருச்செந்தூர், பழனியில் விஸ்வரூப தரிசனம் என்றே பார்க்கலாம். பழமுதிர்ச்சோலையில் திருவனந்தல் பூஜை என்று சொல்வார்கள். காலையில் முருகப்பெருமானைப் பார்க்கும் தரிசனம் தான் விஸ்வரூப தரிசனம். அது எந்த ஊர் முருகர்கோவிலிலும் வழிபடலாம்.

முருகப்பெருமான் தேவர்களுக்குத் தான் யாருன்னு காட்ட வேண்டும் என்பதற்காக இந்த விஸ்வரூப தரிசனத்தை எடுத்தார். தேவேந்திரனுக்கு ஒரு சின்ன சந்தேகம். ‘சிவபெருமானின் சக்தி இல்லாமல் இன்னொரு சக்தி என்னை அழிக்க முடியாது என்று வரம் வாங்கி உள்ள சூரபத்மன்கிட்ட ஒரு சின்ன குழந்தையை முருகப்பெருமானை அனுப்பி அழிக்க வைக்கிறாரே… இவரு எப்படி நம்மைக் காப்பாத்துவார்’ என்ற எண்ணம் இருந்ததாம். அது எல்லா தேவர்களுக்குமே இருந்தது.

அதனால் முருகப்பெருமான் தேவாதி தேவர்கள் எல்லாம் தான் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரே உருவமாக விஸ்வரூப தரிசனத்தில் காட்சி தருகிறாராம். அந்த விஸ்வரூப தரிசனத்தை வீரபாகு தேவருக்கும் காட்டுகிறார்.

வீரபாகு தேவர் முருகனின் நவவீரர்களில் ஒருவர். அவர் தான் முருகனின் தூதுவராக சூரபத்மனைப் பார்ப்பதற்கு வீரமகேந்திரபுரிக்குப் போகிறார். இன்னொரு முறை போர்க்களத்தில் சூரபத்மனுக்கு முருகப்பெருமான் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டுகிறார். முதலில் சூரபத்மனின் முன்னால் குட்டிக்குழந்தையாக நிற்கிறாராம்.

Muruga
Muruga

இதைப் பார்த்ததும் சூரன் சொன்னானாம். ‘உன்னுடன் எல்லாம் என்னால் சண்டை போட முடியாது. உன்னைக் கொன்னுட்டா அம்மா பார்வதி வேற அழுவா. நீ வீட்டுக்குப் போ’ என்றானாம். ‘விளையாடத் தாம்பா வந்துருக்கேன். ஆனா உன் கூட’ என்றாராம். உடனே ‘இவ்வளவு சின்னப் பையனா இருக்குற… நீ எப்படி என் கூட விளையாடுவே..?’ என இளக்காரமாகப் பேசினானாம். உடனே விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியதும் சூரபத்மனால் பார்க்க முடியவில்லை.

அதனால் முருகப்பெருமான் அவனுக்கு ஞானக்கண்ணையும் அழைத்தார். ‘அடடா இவரையா நாம் எதிர்த்தோம் என்று இவரை வணங்கனும், வாழ்த்தணும், தொண்டு செய்யணும்’ என்று நினைத்தான். உடனே அவன் சூரபத்மனாக வந்து இருந்ததால் அவனது ஞானக்கண்ணை மீண்டும் எடுத்தார். ‘அப்படின்னா இது மாய வேலை..’ன்னு நினைத்து மீண்டும் போர் தொடுத்தான். அதில் அவர் சூரசம்ஹாரம் செய்கிறார். இப்படி பகைவருக்கும் அருள்பவர் தான் முருகப்பெருமான்.

அப்பேர்ப்பட்ட இந்த விஸ்வரூப தரிசனத்தை நாம் தரிசிக்கும்போது நமக்கு பலவித பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையில் சுவாமி காட்டும் தரிசனம் தான் இது. இரவில் பள்ளியறை பூஜையின்போது சுவாமி என்ன அலங்காரத்தில் இருந்தரோ அதே மாதிரி அலங்காரத்துடன் விஸ்வரூப தரிசனத்தில் கோடி சூரிய பிரகாசமாய் காட்சி தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...