இதுக்கெல்லாமா திருநாவுக்கரசர் இந்த பேரு வச்சாரு…? இறைவனின் தகுதியை நாம் எப்படி அறிவது?

By Sankar Velu

Published:

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தத்தம் மழலைச் சொல் கேளாதோர்’ என்பர். அனைத்து இசையைக் காட்டிலும் இனிமையான இசை எதுவென்றால் தங்கள் குழந்தையின் மழலை தான். அதே போல் உலகில் எத்தனை நாமங்கள் இருந்தாலும், இறைவின் திருநாமம் தான் நமக்கு என்றும் இனிய மார்க்கத்தைத் தந்தருளும். மார்கழி 15 (30.12.2023) அன்று நாம் காண இருக்கும் மாணிக்கவாசகர், ஆண்டாள் பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.

மாணிக்கவாசகர் இன்று நமக்கு அருளியுள்ள பாடலில் ஓரொருகால் எம்பெருமான் எனத் தொடங்குகிறார். நிறைவு வரியில் வாயார நாம்பாடி என்கிறார்.

markali 15
markali 15

இறைவனின் நாமத்தை வாய் சலிக்காமல் சொல்லணும். சொல்லிக்கிட்டே இருக்கணும். இதுக்கு மட்டும் கணக்குக் கிடையாது. எத்தனை தடவை வேண்டுமானாலும் சொல்லலாம்.

செல்வம் சேர்ப்பதில் சலிப்பு வருவதில்லை. சாப்பாடு விஷயத்தில் மட்டும் போதும்னு சொல்வாங்க. ஆனால் விதவிதமாக சாப்பிடணும்கறதுல சலிப்பு வருவதில்லை.

இறைவனின் நாமத்தை சொல்வதில் அப்பூதி அடிகளாரைப் பற்றி உதாரணமாகச் சொல்லலாம். திருநாவுக்கரசு என்று இறைவனின் பெயர் மேல் அவருக்கு ரொம்ப நாட்டம். சுவாமியே அவரை நாவுக்கரசர் என்று அழைத்ததால் அவருக்கு எவ்வளவு பெருமை?

Thirunavukkarasar
Thirunavukkarasar

வீட்டுப்பெயர், தர்மம் செய்யும் நிறுவனங்கள், குழந்தைகள், மனைவி, அம்மிக்கல், குழவி, கல், மரம், செடி என எல்லாவற்றையும் திருநாவுக்கரசு என்ற பெயரிலேயே அழைத்தார். அப்படி அவர் சொல்லி சொல்லி அனுபவப்பட்டதால் தான் திருநாவுக்கரசரே வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

எல்லாமே அவரது கருணையால் நடைபெறுகிறது. அதனால் தான் நாமத்திற்கு அவ்வளவு பெருமை. நாமம் என்பது நம்மை ஆட்கொள்ளக்கூடியது.

நாமம் என்பது நம்மை உயர்வடையச் செய்வது. நாமம் என்பதை நாம் இடையறாது வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருக்க இருக்க மனசு தேவையில்லாமல் அலைபாயாது. இல்லாவிட்டால் தேவையில்லாத பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். நாம் எப்போதும் இறை சிந்தனையிலேயே இருந்தால் நமக்கு இறையருள் இன்னும் அதிகமாகக் கிடைக்கும்.

ஆண்டாள் இன்றைய பாடலில் எல்லே இளங்கிளியே என்று ஆரம்பிக்கிறார்.

Aandal 15
Aandal 15

இந்தப் பாடலில் ஆண்டாள் மிக எளிமையாக அழகாகப் பாடியுள்ளார். கண்ணனின் வீர தீர பராக்கிரம செயல்களைப் பற்றிப் பேசுகிறார். குவளையாபீடம் என்கிற யானையின் தந்தத்தை ஒடித்துக் கொன்றவனே என்கிறார். ஒருவரிடம் நாம் உதவி என்று போனால் அதைத் தர அவருக்குத் தகுதியிருக்கா என தெரிஞ்சி தான் போகணும்.

இதுபோல தான் இறைவனும். அவனுக்கு நமக்குத் தருகின்ற வல்லமை இருக்கா என பக்தனுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இப்படி ஆண்டாள் இறைவனின் வீர தீர பராக்கிரம செயல்களைக் கூறுகிறார். அதைக் கேட்க கேட்க தான் பக்தன் இறைவன் இதையெல்லாம் செய்வாரா என்று எண்ணிப் பார்த்து அப்படி என்றால் நமக்கும் செய்து அருளுவார் என இறைவனை நாடிச் செல்வான்.

புராணங்களில் இருக்கிற விஷயங்களை எல்லாம் பாவைப் பாடல்களுக்குக் கொண்டு வந்தார் நாச்சியார். நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காகத் தான் இப்படி பாடுகிறார். அன்று சகடாசூரனை கிருஷ்ணர் அழித்தார்…நம்மையும் காப்பாற்றி அருள்வார் என்ற நம்பிக்கை வருகிறது.

மருத்துவரிடம் சென்றால் நோய் குணமாகும் என்று நம்பிக்கை வந்துவிடுகிறது. மருந்து பாதி குணப்படுத்தினாலும் நம்பிக்கை மீதியைக் குணப்படுத்தி விடுகிறது அல்லவா? அதே போல் தான் பக்தியும்.