திருவாசகத்தை எழுதியவர் மாணிக்கவாசகர். இவர் மதுரைக்கு அருகில் திருவாதவூரில் பிறந்தார். இதனால் இவர் வாதவூரார் என்று அழைக்கப்பட்டார்.
அவரது கல்வி, கேள்வி, ஒழுக்கம், ஆற்றலைப் பற்றிக் கேள்விப்பட்டார் அரிமர்த்தன பாண்டிய மன்னன். உடனே அவரை தனது மந்திரியாக்கினார். இவரது திறமை, நிர்வாகத்தைக் கண்ட பாண்டிய மன்னன் இவருக்குத் தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டத்தையும் தந்தார்.
அரசு அலுவல்களில் ஈடுபட்டு இருந்தாலும் மாணிக்கவாசகர் எப்போதும் சிவ சிந்தனையுடனே இருந்தார். பாண்டிய மன்னன் இவரை அழைத்து சோழக் கடற்கரையில் அரபிக்குதிரைகள் வந்துள்ளன. அவற்றில் திறமையானவற்றை வாங்கி வா என்று பொன்னும், பொருளும் கொடுத்து கரசேவகர்களுடன் வழி அனுப்பினார். செல்லும் வழியில் திருப்பெருந்துறையில் உள்ள குறுந்த மரத்தடியில் சிவபரம்பொருளைக் கண்டார்.
உடனே மாணிக்கவாசகர் உருகி ஞானாசாரியராக நின்ற பரம்பொருளின் பாதக்கமலத்தைப் பணிந்து வணங்கினார். பின்னர் தனக்கு இடப்பட்ட கட்டளையை மறந்து சிவசேவை செய்வதிலும், திருக்கோவில் கட்டுவதிலுமே தாம் கொண்டு வந்த பொருளை எல்லாம் செலவழித்தார். இதை அறிந்த பாண்டிய மன்னன் அவரைக் கைது செய்து வரும்படி கூறினார்.
அப்போது ஞானாசாரியாரை நோக்கிய மாணிக்கவாசகர் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு ஞானாசாரியாராக எழுந்தருளிய எம்பெருமான் ஆவணி மூலத்தில் குதிரை வரும் என்று உரை என்று கூறி அனுப்பினார்.
மாணிக்கவாசகரும் அரசன் முன் சென்று அவ்வாறே சொன்னார். பின்னர் அன்றைய தினத்தில் குதிரை எதுவும் இல்லாததைக் கண்ட பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரின் மேல் சந்தேகம் கொண்டு கோபமுற்றான். அப்போது இறைவனே குதிரைச் சேவகராக எழுந்தருளி குதிரையை ஒப்படைத்து விட்டு மறைந்தார்.
பின்பு அன்று இரவே குதிரைகள் அனைத்தும் நரியாகி ஊளையிட்டு காட்டை நோக்கி ஓட ஆரம்பித்தன.
இதனை அறிந்த பாண்டிய மன்னன் மேலும் கோபமுற்று வாதவூராரை சிரச்சேதம் செய்யும்படி கட்டளையிட்டார். அந்தத் தருணத்திலும் மாணிக்கவாசகர் கவலையோ பயமோ கொள்ளாமல் தனது இடைவிடாத பராபக்தியையே பற்றிக் கொண்டு இருந்தார். எல்லாம் ஈசன் செயல். இதுவும் கடந்து போகும் என்று சிவநாம சிந்தனையிலேயே இருந்தார்.
அதே நேரத்தில் வைகை ஆற்றில் பெருமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இருகரைகளையும், அதனுடன் தொடர்புடைய கிராமத்தையும் அடித்துச் சென்றது. வீட்டிற்கு ஒருவரை கரை அடைக்க செல்லுமாறு மன்னன் உத்தரவிட்டான். அதன்படி வந்திப்பாட்டிக்கு ஆள் இல்லாததால் இறைவனே வந்து உதவினான்.
அப்போது நடந்த சம்பவம் தான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை. வந்தி பாட்டிக்கு கரையை அடக்க உதவிய இறைவனாகிய சிறுவன் அங்கும் இங்கும் ஓடி விளையாடினான். இதைக் கண்ட பாண்டிய மன்னன் கோபமுற்று அவனை பிரம்பால் அடித்தான். அந்த அடி உலகில் உள்ள உயிர்களின் மேல் பட்டது. அப்போது சிறுவனும் மறைந்து போனான்.
இது இறைவனின் லீலை என்பதை உணர்ந்து அகம் தெளிந்தான் பாண்டிய மன்னன். உடனே தனது தவறுக்கு வருந்தி சிறையில் இருந்த வாதவூராரை விடுவித்தார். தனது அமைச்சர் சிவபக்தியில் அபாரமானவர் என்பதை உணர்ந்து பெரு மகிழ்ச்சி கொண்டார். தம்மைப் போல சிவனடியாரை அமைச்சராகப் பெற்றது முன் செய்த தவமே என்றார். உம்மால் அல்லவா நான் இருமுறை சிவனைக் கண்டேன் என்று மாணிக்கவாசகரை ஆரத்தழுவினார்.
எதனை என்னுடையது என்று கருதினேனோ அவை அனைத்தும் சிவன் சொத்து என்று கண்டுகொண்டேன். அவனின்றி ஒரு அணுவும் அசையாது. அவனே எல்லாம் வல்லவன். அவன் நரியை பரியாக்குவான். பரியை நரியாக்குவான். அவனே ஈசன். எல்லோருக்கும் ஆண்டவன் என்றான் பாண்டிய மன்னன். உடனே மாணிக்கவாசகரின் விருப்பப்படி அவரை பணியில் இருந்து விடுவித்து சிவசேவையில் ஈடுபட அனுமதித்தான்.
மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் கோவில் கட்டி முடித்தார். சிவசேவை செய்தார். சிவயோகத்தில் தேர்ச்சி பெற்றார். தனது 28வது வயதில் மாணிக்கவாசகர் இறைவனுடன் தில்லையில் இரண்டற கலந்து அருளினார்.
மாணிக்கவாசகரின் அவதார தினம் இந்த வருடம் நாளை (23.06.2023) ஆனி மாதம் 8 ம் தேதி மகம் நட்சத்திரத்தில் வருகிறது. அவரது இந்த திரு அவதார தினத்தில் அவரது திருவாசகத்தைப் படித்து நாமும் இறைநிலையை அடைவோம்.