சிவபெருமானின் மிக முக்கியமான ஒரு விரதநாள் மகாசிவராத்திரி. மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சதுர்த்தசியில் கொண்டாடப்படுவதுதான் மகாசிவராத்திரி. இது வரும் 26ம் தேதி வருகிறது. 25ம் தேதி பிரதோஷம்.
பிரதோஷ விரதத்தை மாலையில் முடித்துவிட்டு உணவு எடுத்துக்கொள்ளலாம். சிவராத்திரி விரதம் 26ம் தேதி காலையில் இருந்து ஆரம்பிக்கலாம். பிரதோஷம் விரதம் இருக்காதவர்கள் 25ம் தேதி மதியமே சமைத்த பொருள்களை நிறுத்தி விட்டு அன்று இரவு எளிமையான உணவுகள் பால், பழம், ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். அவரவர் உடற்தகுதிக்கேற்ப இந்த உணவை எடுத்துக்கொள்ளலாம்.
சிவராத்திரி அன்று மிக முக்கியமான விரதம் மௌனவிரதமும் இருக்கலாம். அல்லது வீட்டில் இருந்தே சிவபெருமானின் பதிகங்கள், பாடல்களைப் படித்துப் பாராயணம் செய்து கொள்ளலாம். காலையில் இருந்தே உபவாசம் இருக்கலாம். எளிமையான உணவுகள், இளநீர், தண்ணீர், பால் என நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளலாம். சிவபெருமானின் திருவுருவப்படம், லிங்கம் இருந்தால் அதன் முன் உட்கார்ந்து வழிபாட்டை ஆரம்பிக்கலாம். சாயங்காலம் பூஜைக்கு முன் ஒருமுறை குளித்துக்கொள்ளலாம்.
நீங்களே உங்கள் கையால் அபிஷேகம் ஆராதனை பண்ணுவதாக இருந்தால் குளித்துக் கொள்ளலாம். கருங்கல், பஞ்ச உலோகம், வெள்ளியில் லிங்கம் இருந்தால் அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரியில் மொத்தம் 4 கால பூஜை உண்டு. முதல் காலம் இரவு 7.30 மணிக்கும், இரண்டாம் காலம் இரவு 10.30மணி, 3ம் காலம் நள்ளிரவு 12 மணி, 4ம் காலம் அதிகாலை 4.30மணிக்கும் ஆரம்பிக்கிறது.
இது கோவில்களைப் பொருத்து வேறு வேறு நேரங்களிலும் ஆரம்பிக்கும். பக்கத்தில் உள்ள கோவில்களில் உள்ள காலத்தையும் கடைபிடிக்கலாம். முதல் காலம் மாலை 7.30மணிக்கு ஆரம்பித்தால் 6 மணிக்குக் குளிச்சிட்டு விளக்கேற்ற வேண்டும். சிவபெருமானுக்கு விருப்பமான வில்வம், மலர்கள் வச்சிக்கலாம்.
எந்தெந்த காலத்தில் என்னென்ன அபிஷேகம், என்ன நைவேத்தியம்னு பலரும் கேட்பதுண்டு. சிவராத்திரி அன்று சிவலிங்கத்துக்கு ஒரே ஒரு வில்வ இலையை வைத்து பூஜை பண்ணினாலே அந்த பலன் நிச்சயம் கிடைக்கும். லிங்கம் இல்லாதவர்கள் திருவுருவப்படத்துக்கு அபிஷேகப் பொருள்களை நைவேத்தியம் செய்து வழிபடலாம்.