சிவராத்திரியில் மொத்தம் 4 கால பூஜை உண்டு. முதல் காலம் இரவு 7.30 மணிக்கும், இரண்டாம் காலம் இரவு 10.30மணி, 3ம் காலம் நள்ளிரவு 12 மணி, 4ம் காலம் அதிகாலை 4.30மணிக்கும் ஆரம்பிக்கிறது. இது கோவில்களைப் பொருத்து வேறு வேறு நேரங்களிலும் ஆரம்பிக்கும். பக்கத்தில் உள்ள கோவில்களில் உள்ள காலத்தையும் கடைபிடிக்கலாம்
சிவராத்திரியின் முதல் காலம் பிரம்ம தேவர் பூஜித்த காலம். அந்த காலத்தில் சிவபெருமானுக்குப் பாலால் அபிஷேகம் செய்து பாசிப்பருப்பு கலந்த சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் பண்ணலாம். 2வது காலம் மகாவிஷ்ணு வழிபாடு செய்தது. அந்தக்காலத்தில் பஞ்சாமிர்தத்தால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து இனிப்பால் செய்யப்பட்ட பாயாசம், கற்கண்டு பொங்கல் நைவேத்தியமாக வைத்து வழிபடலாம்.
3வது காலம் சுவாமியோடு இணைந்து இருக்கும் சர்வசக்தி படைத்த அம்பாள் வழிபட்ட காலம். இதுதான் சிவராத்திரியில் மிக முக்கியமான காலம். லிங்கோத்பவர் காலம். தேனால் அபிஷேகம் பண்ணி, ஒரு வில்வ இலையால் அர்ச்சனை, எள்சாதம் நைவேத்தியம் வைக்கலாம். 4வது காலத்தில் கரும்புச்சாறு அல்லது பாலால் அபிஷேகம் செய்யலாம். சுத்தசாதம் நெய்விட்டு நைவேத்தியம் பண்ணலாம்.
திருவாசகத்தின் முழுப்பகுதியையும் சிவராத்திரி அன்று முற்றோதுதல் செய்தால் ரொம்பவே விசேஷம். சிவபுராணத்தில் இருந்து ஆரம்பித்து படிங்க. இடையிடையே நைவேத்தியம் செய்து கொள்ளுங்கள். விடிய விடிய நாலு கால அபிஷேகம் செய்து பாடல் படித்து வழிபாட்டைப் பூர்த்தி செய்யலாம். குலதெய்வ கோவிலுக்கும் சென்று வில்வம், மலர்கள் வாங்கி அர்ச்சனைக்குக் கொடுக்கலாம். பால், பழம் கொண்டு போய்க் கொடுக்கலாம். வீட்டு அருகில் உள்ள சிவன் கோவிலுக்கும் சென்று சிவராத்திரி கொண்டாடலாம்.
மறுநாள் காலை 6 மணிக்கு விரதத்தைப் பூர்த்தி செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். சிவன் கோவிலில் தரும் பிரசாதத்தை சாப்பிடலாம். அதனால் அதை சிறிது எடுத்துக் கொள்ளலாம். தவறில்லை. நல்ல சாப்பிட்டுட்டு 27ம் தேதி காலையில் தூக்கம் வரும். அன்றுதான் தூங்கக்கூடாது. மறுநாள் மாலை 6 மணிக்கு சாமிக்குத் தீபம் ஏற்றி வழிபட்டதும் தான் தூங்கவேண்டும். இப்படித்தான் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.