மதுரை மீனாட்சி அம்மன் தோளில் கிளி இருப்பது ஏன்னு தெரியுமா? அங்கயற்கண்ணியின் மகிமையைப் பாருங்க…

By Sankar Velu

Published:

மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் தான். தமிழக மக்களைக் காத்தருள அன்னை மீனாட்சி எடுத்த அவதாரம் மிகவும் வித்தியாசமானது. தனித்துவம் நிறைந்தது.

மானிட உருவில் ஒரு குடும்ப தலைவியாகப் பொறுப்பேற்று அதே சமயம் ஒரு பேரரசியாக இருந்து தம் மக்கள் அனைவருடைய உள்ளத்தையும் தன் கருணை கடாட்சத்தால் ஆண்டு வழிகாட்டியவள் மதுரை மீனாட்சி. கயல்மீன் போன்ற அழகிய கண்களையுடைய தெய்வப்பெண் நின்று நிகழ்த்திய ஆட்சி என அவருடைய ஆளுமையை முன்வைத்தே ‘மீனாட்சி’ என்ற பெயர் அன்னைக்கு ஏற்பட்டது.

Mdu Meenakshi
Mdu Meenakshi

தான் இடும் முட்டைகளை, எட்ட நின்று தன் கண்பார்வைத் திறத்தினாலேயே குஞ்சுகளைத் தோன்றச் செய்து, தனது பார்வை ஆற்றலினாலேயே அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பது மீனின் இயல்பு. அதேபோன்று மீனாட்சி அம்மன் தனது அருட்கருணைத் திருக்கண் பார்வையினாலேயே தம் பக்தர்கள் அனைவரையும் தோற்றுவித்து, வளர்த்து, காத்து ரட்சித்து வருகிறாள்.

அன்னையின் இந்த அருட்செயல் காரணமாக ‘மீனாட்சி’ என்ற பெயர் ஏற்பட்டது. மதுரையிலே அம்மையும், அப்பனும் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலை சுந்தரேசுவரர் மீனாட்சி ஆலயம் என்று யாரும் கூறுவதில்லை. மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் எனத்தான் பக்திப் பரவசத்துடன் அழைக்கின்றனர்.

Meenakshi Amman
Meenakshi Amman

சக்தியின் அருள் இயக்கத்தை வைத்துதான் சிவத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும். இந்த ஆன்மிக தத்துவத்தை தான் மீனாட்சி சுந்தரேசுவரர் பிணைப்பிலே காண முடிகிறது. கருவறையிலே அன்னை மீனாட்சி இரண்டு திருக்கரங்களுடன் கருணை பொங்கும் அருட்பார்வையுடன் காணப்படுகிறாள்.

சாதாரணமாக சிவாலயங்களில் அப்பனின் திரு உருவத்தை வழிபட்ட பிறகு தான் அம்மையைத் தரிசிக்க செல்வது வழக்கம். இங்கே மீனாட்சி அம்மனை தரிசித்து வழிபட்டு அருளாசியைப் பெற்ற பிறகு தான் சுந்தரேசுவரர் சன்னதிக்குச் சென்று அவரை வழிபடுவது வழக்கத்தில் இருக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மனின் உருவத்தை நினைத்தாலே அவர் திருத்தோளில் இருக்கும் கிளியின் நினைவும் நமக்கு வந்து விடும். மீனாட்சி மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த நேரத்தில் பறக்க முடியாத ஒரு கிளி மீனாட்சியை எண்ணி அழுததாம்.

அகிலத்தையே காக்கும் அந்த அங்கயற்கண்ணி கிளியை தனது கரத்தில் தாங்கி எப்போதும் தன்னோடே இருக்குமாறு வைத்துக்கொண்டாள் என ஒரு கர்ண பரம்பரை கதை சொல்லப்படுகிறது.

Meenakshi Amman 2
Meenakshi Amman 2

அதுமட்டுமல்ல, அன்னையை வேண்டி வணங்கும் பக்தர்களின் வேண்டுதல்களை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு இந்த கிளி தான் அன்னையிடம் எப்போதும் சொல்லிக்கொண்டு இருக்குமாம். அதனால் தான் பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது மட்டுமல்ல, அவர் ஏந்திய அந்தக்கிளியின் மீதும் பக்தி கொண்டிருக்கிறார்கள். உங்கள் வேண்டுதல்களை எதற்கும் அந்த கிளியிடம் சொல்லி வையுங்கள்.

அந்த கிளி உங்கள் வேண்டுதல்களை சரியான நேரத்தில் அன்னை மீனாட்சியிடம் எடுத்து சொல்லி உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவும். அதனால் மதுரை சென்றால் கிளியை மட்டும் மறந்து விடாதீர்கள்.