முருகப்பெருமானுக்கு எத்தனை நாமம் இருக்குன்னு அருணகிரிநாதரிடம் போய்க் கேட்டால் பல கோடி நாமம் இருக்குன்னு சொல்கிறார். உடனே எங்களுக்கு வாயில் வருகிற மாதிரி எளிய நாமங்களை சொல்லுங்க என்று கேட்டால் சிலவற்றை சொன்னாராம். அவற்றில் இருந்து 3 நாமங்களைப் பார்ப்போம்.
முருகன், குமரன், குகன் என்ற நாமங்கள் தான் அந்த மூன்று. முதலில் அவர் சொன்னது ‘முருகன்’ என்ற நாமம். முருகன் நாமங்களிலேயே மிக மிகப் பழமையான நாமம் ‘முருகு’. இது ‘பிங்கல நிகண்டு’லேயே பேசப்பட்ட நாமம்.
தமிழில் 3 இனங்கள் உண்டு. வல்லினம், மெல்லினம், இடையினம். இவற்றில் இருந்து ஒவ்வொரு எழுத்தாக வைக்கப்பட்டது தான் ‘தமிழ்’ என்ற வார்த்தை. அது போலத் தான் ‘முருகு’ என்ற நாமமும் உள்ளது. ‘மு’ என்பது மெல்லினம். முதலில் மெல்லினத்தில் இருந்து தொடங்கியதால் ‘முருகன்’ மென்மையானவன் என்று உணர முடிகிறது. முருகு என்றால் இளமையானவன். அழகானவன். வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை வாரி வாரி வழங்குபவன் என்றும் இதற்கு அர்த்தம்.
‘முருகா… முருகா…’ என்று சொல்லிக் கொண்டே இருந்தால் நம் வாழ்க்கையில் செய்த எல்லா வினைகளும் நீங்கும். நமது கர்மாக்கள் தொலைந்து நல்ல கதியை முருகப்பெருமான் வழங்குவார். அவருக்கு ‘ஓம் சரவணபவ’ என்ற நாமத்தைப் போல முருகா என்ற நாமமும் ஒரு மந்திரச் சொல் தான். இதைச் சொல்லிக் கொண்டே இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வித துன்பங்களும் அண்டாது.
ஆனால் மனமுருகி சொல்ல வேண்டும். அடுத்து ‘குமாரன்’ நாமம். தேவையற்ற குப்பைகளான கோபம், ஆசை, பகை ஆகிய தேவையற்ற ‘குப்பைகளை அழிப்பவன்’ தான் முருகப்பெருமான். ‘மாரன்’ என்றால் அழிப்பவன் என்று பொருள். ‘மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை’ என்பார் திருமூலர்.
மனதில் அழுக்குகள் நீங்கும்போது நம் இளமை தக்க வைக்கப்படுகிறது. அடுத்து ‘குகன்’. அப்படி என்றால் இதயக் குகையில் வாழ்பவன் என்று பொருள்.
குமாரன் நம் மனதில் உள்ள குப்பைகளை எல்லாம் வெளியேற்றி தூய்மைப்படுத்துகிறார். அதன்பிறகு குகன் என்ற முருகப்பெருமான் நமது இதயக்குகையில் வந்து வாசம் செய்வான். முருகன் அடியார்களிடம் கோபம், பொறாமை, வஞ்சனை எதுவும் இருக்காது. ஏன்னா அவர்களது இதயக்குகையில் குகன் இருக்கிறான். அதனால் இந்த 3 நாமங்களையும் நாம் உச்சரித்து வாழ்வில் வளம் பெறுவோம்.
மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.