கார்த்திகை மாதத்தில் சோமவாரம் பிரசித்திப் பெற்றது. சிவன் கோவிலுக்குப் போனால் அங்கு சங்காபிஷேகம் நடக்கும். அவற்றைக் காண கண்கோடி வேண்டும். அத்தனை அழகு. அத்தனை சிலிர்ப்பு. உற்சாகத்தையும், பரிபூரண கடவுள் அருளையும் தரக்கூடியது. இதைப் பற்றிப் பார்ப்போமா…
சிவபெருமானை வழிபடக்கூடிய அஷ்ட விரதங்களில் மிக முக்கியமானது தான் சோமவார விரதம். திங்கள்கிழமைக்கு சோமவாரம் என்று பெயர். சோமனாகிய சந்திரன் சிவபெருமானை வழிபட்டு நலன் பெற்று தான் பெற்ற நலனை எல்லோரும் பெற வேண்டும் என்று இறைவனிடத்தில் விண்ணப்பம் செய்தார்.
சோமவார விரதம்
அதனால் இதற்கு சோமவாரம் என்று பெயர். பலரும் ஆண்டுமுழுவதும் திங்கள்கிழமை விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் கார்த்திகை மாதம் வரும் 5 திங்கள்கிழமையும் விரதம் இருந்து வழிபடுவது மிகச்சிறப்பு. இப்படி வழிபடுவதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
நமக்கெல்லாம் இது நடக்காது. கிடைக்காதுன்னு நினைத்த காரியங்கள் இந்த சோமவார விரதம் இருப்பதால் கிடைக்கும். திருமணம், குழந்தைபேறு, நீண்டகால வியாதி நீங்க என அத்தனை பிரார்த்தனைகளும் நிறைவேறும். சிவபெருமானின் வழிபாடு போல சோமவாரங்களில் முருகப்பெருமானுக்கும் வழிபாடு சிறப்பு வாய்ந்தது.
5 சோமவாரங்கள்
சிவபெருமானுக்கு இறப்பும், பிறப்பும் இல்லாதது போலவே முருகனுக்கும் அவை கிடையாது. அதனால் அவருக்கும் சோமவாரம் விசேஷமானது. இந்த ஆண்டு 18.11.2024, 24.11.2024, 2.12.2024, 9.12.2024, 16.12.2024 ஆகிய 5 சோமவாரங்கள் வருகிறது. இவற்றில் முதல் 4 சோமவாரமும் கார்த்திகை மாதம் வருகிறது. கடைசியாக வருவது மார்கழி முதல் நாளில் வருகிறது. எப்போதுமே 5 சோமவாரங்கள் தான் கடைபிடிப்பார்கள்.
பஞ்சாட்சரன்
அது மார்கழி மாதம் வந்தாலும் எடுக்க வேண்டும் என்பது தான் நியதி. சிவபெருமானுக்கு 5 என்ற எழுத்து விசேஷம். அவருக்கு ‘பஞ்சாட்சரன்’ என்று பெயர். அதனால் 5 சோமவார விரதங்களை நாம் எடுத்துக் கொள்கிறோம்.
பிரதிபலன்
நம்மவர்கள் எப்போதுமே கடவுளைக் கும்பிட்டால் என்ன பலன்? ஒரு விரதத்தைக் கடைபிடித்தால் என்ன பலன்? அந்தக் கோவிலுக்குப் போனால் என்ன பலன்? இந்த விரதத்தைக் கடைபிடித்தால் என்ன பலன் என்று தான் கேட்கிறார்கள். அப்படி என்றால் கடவுளிடம் போய் வழிபடுவதைக் கூட அவர்கள் ஒரு கடமையாகக் கருதாமல் பிரதிபலன் வேண்டித்தான் செல்கிறார்கள்.
முன்னோர்கள்
பிரதிபலன் கருதாமல் கடவுள் நமக்கு பலன்களைத் தருகிறார். கடவுளை வேண்டி நாம் பலன்களைப் பெற்றதும் நன்றி சொல்கிறோமா என்றால் அதுவும் இல்லை. அப்படி என்றால் உண்மையான கடவுள் வழிபாட்டை நாம் மனமுருகி அனுதினமும் வேண்ட வேண்டும் என்பதற்காகத் தான் நம் முன்னோர்கள் வருடம் முழுவதும் பல விசேஷங்களைக் கடவுளை வழிபடும் வகையில் அனுஷ்டித்து வந்தனர் என்பதே உண்மை.