300 ஆண்டுகள் அதிசயம்… இங்கேயும் ஒரு கங்கை… வந்தது எப்படின்னு தெரியுமா?

By Sankar Velu

Published:

இன்று சனிக்கிழமை (30.11.2024) கார்த்திகை மாத அமாவாசை அன்று திருவீசநல்லூரில் பக்தர்கள் படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். 300 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதரய்யாவாள் என பிரபலமாக மக்களால் அழைக்கப்பட்ட ஒரு மகான் வாழ்ந்து வந்தார்.

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் என்ற ஊருக்கு அருகில் உள்ள திருவீசநல்லூர் என்ற கிராமத்தில் பிறந்த இவர் சிறந்த மகானும் கர்நாடக இசை வல்லுனர். இவர், போதேந்திரர், நெரூர் சதாசிவ பிரமேந்திரர் ஆகிய மூவரும் சம காலத்தவர்.

Thiruvidai maruthur koil
Thiruvidai maruthur koil

கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் ஸ்ரீதர ஐயாவாள். இவர் தன் பதவி சொத்துக்களைத் துறந்து விட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவீசநல்லூரில் வந்து குடியேறி விட்டார். இவர் தினமும் அருகேயுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிக்கும் வழக்கம் கொண்டவர்.

வயதான ஏழை

இவரது தந்தை மறைந்த திதியான கார்த்திகை மாதத்தில் அமாவாசை நாளில் இவரை சிரார்த்த சமையல் தயார் செய்ய சொல்லி விட்டு காவிரிக்கு நீராட சென்றார். நீராடி இல்லம் திரும்பும் போது எதிரே வந்த வயதான ஏழை ஒருவர் ஐயாவாளிடம் ‘சுவாமி எனக்கு வயிறு  ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன்’ என கேட்கிறார்.

சிரார்த்த சமையல் 

அவர் மீது இரக்கம் கொண்ட ஸ்ரீதர ஐயாவாள் அவரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்த போது சிரார்த்த சமையல் மட்டுமே தயாராக இருந்தது. பசி மயக்கத்தில் இருந்த அந்த ஏழைக்கு சிரார்த்த சமையல் உணவை எடுத்துக் கொடுத்து பசியாற்றினார்.

சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும். மீதம் உள்ளதை பசுவுக்குத் தான் கொடுக்க வேண்டும். இது தான் நியதி. ஆனால் இவர் அந்த நியதியை மீறினார்.
அதனால் கடும் கோபமடைந்த சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.

மேலும் ‘நீ காசி சென்று கங்கையில் குளித்து விட்டு பரிகாரம் செய்து வந்தால் தான் நாங்கள் திதி கொடுப்போம்’ என்றனர். ஒரே நாளில் எப்படி அவ்வளவு தூரத்திலுள்ள காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு அன்றே திரும்பி வர முடியும்?

கனவில் தோன்றிய சிவனார்

‘இதென்ன நமக்கு வந்த சோதனை?’ என ஸ்ரீமகாலிங்க சுவாமியை நினைத்தபடி மிகுந்த மன வருத்தத்துடன் படுத்தவர் அப்படியே அசதியில் உறங்கி விடுகிறார். அப்போது கனவில் தோன்றிய சிவனார் திருக்காட்சி கொடுத்து ‘உன் வீட்டுக் கேணியில் கங்கையை யாம் பிரவேசிக்கச் செய்வோம். கவலைப்படாதே’ என உறுதியளித்து மறைந்து விட்டார்.

திருவீச நல்லூர்

அதன்பின் ஐயாவாள் தம் வீட்டு கிணற்றருகே நின்று கங்கை அன்னையை நினைத்து உளம் உருக கங்காஷ்டகம் பாடினார். பாடி முடித்தவுடன் கங்கை மாதா அந்தக் கிணற்றில் எழுந்தருள அந்தக் கிணறு பொங்கி வழிந்து திருவீச நல்லூர் முழுவதும் கங்கைத் தாய் வெள்ளமாய் பாய்ந்தோடினாள்.

 300 ஆண்டு அதிசயம்

அதனைக் கண்ட அந்தணர்கள் ஐயாவாளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அந்தக் கிணற்றில்  நீராடினார்கள். இந்நிகழ்வு நினைவாக இன்றளவும் அதாவது கடந்த 300 ஆண்டுகளாக கார்த்திகை அமாவாசையன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமையில் இருந்தும் வந்து நீராடிச் செல்கிறார்கள்.

கார்த்திகை அமாவாசை தினத்தை மகாலட்சுமியின் திருஅவதார தினமாகவும் கொண்டாடுகின்றனர். இன்றைய நாள் பசுமாட்டுக்கு அகத்திக்கீரை கொடுக்கலாம். அந்தணர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.