நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி நாள்கள் இந்த மாதத்திற்கு சிறப்புக்குரியவை. அந்தவகையில் இந்த ஆண்டின் நவராத்திரி எப்போது வருகிறது?
நவராத்திரியில் கொலு வைத்து வழிபடுவது, கொலு வைக்காமல் கலசம் மற்றும் அகண்ட தீபம் வைத்து வழிபடுவது மற்றும் அதைக் கலைக்கும் முறை ஆகியவையும் உள்ளன. அவற்றைப் படிப்படியாகப் பார்ப்போம். மேலும் கன்னிகா பூஜைன்னா என்ன? என்று இப்போது பார்க்கலாம்.
இந்து மதத்தின் சிறப்புமிக்க வழிபாடுகளில் அன்னை தெய்வங்களைப் போற்றும் விதமாக வழிபடுவது நவராத்திரி.
நவ என்றால் 9. பருவகாலங்களுக்கு ஏற்ப 9 நாள்களைக் கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு. நவராத்திரி என்பது சமஸ்கிருத வார்த்தை. இதற்கு 9 இரவுகள் என்று பொருள். சாரதா நவராத்திரி புரட்டாசி மாதம் அமாவாசையை அடுத்த பிரதமை திதி தொடங்கி 9 நாள்கள் நவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.
துர்கா தேவியின் 9 அவதாரங்கள் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. மகேஷ்வரி, கௌமாரி, வாராஹி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டி என பல வகை ரூபங்கள் எடுத்தாலும் அடிப்படை ஆதார சக்தி ஒன்றே. இந்தத் தெய்வங்கள் அனைத்தையும் வீட்டிற்கே வரவழைப்பது தான் நவராத்திரி வழிபாடு.
அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதி தொடங்கி 10 நாள்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. முதல் 3 நாள்கள் துர்கா, அடுத்த 3 நாள்கள் மகாலட்சுமி, கடைசி 3 நாள்கள் சரஸ்வதி தேவியைப் போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி வரும் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
கன்னிகா பூஜை என்பது துர்கா பூஜையின் போது இளம் கன்னியர்கள் செய்யும் வழிபாடு. பெண்குழந்தைகளை பாலாதிரிபுர சுந்;தரியாக பாவித்து செய்யும் வழிபாடு.
2 முதல் 9 வயது வரை உள்ள பெண் குழந்தைகளைக் கன்னிகா பூஜையாக செய்து வர வேண்டும். நவராத்திரியின் 9 நாள்களும் பராசக்தி ஒவ்வொரு தேவியாக வந்து 9வயது வரை உள்ள பெண்குழந்தைகளின் வடிவில் அவதாரம் செய்வதாக ஐதீகம்.
9 நாள்களும் குழந்தைகளை அழைத்து வந்து தேவியாக பாவித்து உபசரிப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக நவராத்திரியின் 8 ம் நாளன்று அதாவது அஷ்டமி நாளில் கன்னிபூஜை செய்வது வழக்கம். இந்த பூஜை அன்று 9 பெண்குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்குப் பாத பூஜை செய்து உணவளித்து வழிபட வேண்டும். அவர்களுக்குப் புதிய ஆடை, தாம்பூலம் கொடுக்க வேண்டும். இந்த பூஜையில் கலந்து கொள்ளும் 9 பெண்குழந்தைகளும் துர்கா தேவியின் 9 அம்சமாகக் கருதப்படுகின்றனர்.
கன்னிகைகளின் வயதிற்கேற்ப 9 நாளும் தினம் ஒரு கன்னிகை என பூஜை செய்து வழிபட வேண்டும். இவர்களுக்கு குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்திரா என்று பெயர்.