விரதம் எதற்காக இருக்கிறோம்? இறைவனின் அருள்பார்வை கிடைக்க நாம் இரண்டு விஷயங்களைப் பின்பற்றினால் போதும். அவை என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.
இன்று மார்கழி 10 (25.12.2022) ஞாயிற்றுக்கிழமை.
பாதாளம் ஏழினும்கீழ் என்று தொடங்குகிறது. இந்தப் பாடல். இதில் மாணிக்கவாசகர் என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்போம்.
இது ஒரு அழகான தத்துவம். இறைவனுக்கு ஊர், பெயர் என்று தனியாக இல்லை. அவரது உறவினர், பகைவர் என்று யாருமில்லை. அனைவரும் ஒன்றே.
மதுரைக்குப் போனா சுந்தரேஸ்வரர். காசிக்குப் போன விஸ்வநாதர். கைலாயத்துக்குப் போனா கைலாயநாதர். அவருக்குப் பல பெயர்கள் உண்டு.
இறைவன் கோவிலில் மட்டுமா குடியிருக்கிறார். உள்ளத்திலும் இருப்பார். எல்லா இடங்களிலும் இருப்பார். அவருக்கு என்று உறவினர்கள் அடியார்கள் தான். அம்மா இல்லாததால் சிவபெருமான் ரொம்ப கஷ்டப்பட்டார். காரைக்கால் அம்மையாரைத் தான் அம்மா என்று அழைக்கிறார்.
பட்டினத்து சுவாமிகளிடம் மகனாக சென்று அவரை கொஞ்ச காலம் தந்தையாக ஏற்றுக்கொண்டார். நட்பு ஒருவரது வாழ்க்கையில் மிக முக்கியம். குறளில் நட்பை மட்டும் 50 குறள்பாக்கள் உண்டு.
உற்றார், உறவினர், அயலார் என யாருமில்லை. எங்கும் பரிபூரணத்துடன் நிறைந்து இருப்பார். அந்தப் பெருமானை சரணாகதி அடைந்தால் நிச்சயமாக உயர்வு கிடைக்கும். அப்பேர்ப்பட்ட இறைவன் எல்லாவற்றையும் கடந்து நிற்கிறார் என்பதைத் தான் இந்தப் பாடல் உணர்த்துகிறது.
ஆண்டாள் நாச்சியார் இந்த நன்னாளில் நோற்றுச் சுவர்க்கம் என்ற அற்புதமான பாடலை எழுதியுள்ளார்.
போன பிறவியில் விரதம் இருந்து அதன் மூலம் கிடைக்கக் கூடிய புண்ணியத்தினால் சொர்க்கம் கிடைக்கிற பெண்ணே என அழைக்கிறார்.
ஏகாதசி மாதந்தோறும் வருகிறது. ஒவ்வொன்றிலும் விரதம் இருந்தால் ஒரு பலன் கிடைக்கும். இந்த மாதம் வைகுண்ட ஏகாதசி வருகிறது. அன்று விரதம் இருந்தால் சொர்க்கத்துக்குப் போயிடலாம் என்று நம் முன்னோர் சொல்வர். இறைவனுக்கும் நமக்குமான உறவை இந்த விரதம் எவ்வாறு மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. ஒன்று நாம் உண்ணும் உணவு.
மற்றொன்று நம் மனதின் மாற்றம். இது தீய விஷயங்களை மாற்றும். உணவு நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த இரண்டையும் நாம் சரியாக பராமரித்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். இந்த உடலுக்கு மிகப்பெரிய மருந்தே பட்டினி தான். நோய் உண்டாவதே தேவையில்லாததை சாப்பிடுவதால் தான். உடலுக்கு ஒரு நாளாவது விரதம் இருப்பது நல்லது.
இந்த உடலுக்குள் இருக்குற ஆற்றல் சக்தியை வைத்தே இந்த உடம்பை இயக்க வேண்டும். அதற்கு மனம் ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான் பசி என்றால் என்ன என்பதே தெரியும். உடல், மன மாற்றம் எங்கு ஏற்படுகிறதோ அங்கு ஒரு மனிதன் தவறு செய்யவே மாட்டான். இந்த இரண்டையும் நாம் இருந்தால் நம் மனது பக்குவப்படும்.
இதனால் தான் பெரியவங்க விரதம் இரு. மோட்சம் கிடைக்கும்னு சொன்னாங்க. இதை எல்லாம் மறந்துவிட்டு விரதம் இருந்த உடனே மோட்சம் கிடைத்துவிடுமா என கிண்டல் செய்வர். அது தவறு.
மோட்சம் கிடைப்பதற்கான பக்குவ நிலை அதாவது அடிப்படை இதுதான். இதிலிருந்து நீங்கள் படிப்படியாக அந்த உயர்வு நிலையை அடையலாம். எப்பவோ நீ விரதம் இருந்ததற்கான பலன் தான் தற்போது நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்.
இப்போ நீ தவம் செய்து விரதம் இருந்தால் தான் அடுத்த ஜென்மத்தில் நல்லா இருக்க முடியும். இப்போது விரதம் இரு. இப்போது கண்ணனை வணங்கு என்று தோழியைப் பார்த்து ஆண்டாள் கூறுகிறாள். இங்கு தோழி என்பது அவர் மட்டுமல்ல.
நம் எல்லோரையும் சேர்த்துத் தான் சொல்கிறார். ஆக நாம் இருக்கும் விரதம் நம்மை ஒரு உன்னதமான நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.